மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தம்மிக்க பெரேரா
ராஜபக்ஷ குடும்பத்தின் அரசியல் கோட்டையாக இருந்த மொட்டுக் கட்சி, இலங்கை வரலாற்றில் எதிர்கொண்ட மிக மோசமான பொருளாதார நெருக்கடியினாலும் அதனால் ஏற்பட்ட போராட்டத்தினாலும் நெருக்கடிக்குள்ளானது என்பது ரகசியமல்ல.
இதனால், ராஜபக்ஷர்களுக்குக் கிடைத்திருந்த நிறைவேற்று ஜனாதிபதி பதவியும் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு அதிகாரத்தையும் இழந்தனர். ராஜபக்ஷ ஆட்சியானது விக்கிரமசிங்க ஆட்சியாக அதிகாரப் பரிமாற்றம் செய்துகொண்டபோதுகூட மொட்டுக் கட்சியினரால் வீடுகளைவிட்டு வெளியேற முடியாத சூழல் இருந்தது.
இவ்வாறான நிலையில், சாம்பலைத் துடைத்துப்போட்டுக்கொண்டு மீண்டும் எழுந்துப் பறக்கும் முயற்சியில் அக்கட்சி இறங்கியுள்ளது. அதன் முதற்கட்ட முயற்சி, கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
சமூகவலைத்தளங்கள் ஊடாக எத்தனை விமர்சனங்கள், அவதூறுகள் தூற்றப்பட்டாலும், சுகததாச உள்ளக அரங்கில் கடந்த 15ஆம் திகதி நடைபெற்ற மொட்டுக் கட்சியின் தேசிய மாநாட்டிற்கு சுமார் ஏழாயிரம் பேர் வந்திருந்தனர்.
எது எவ்வாறாயினும், போராட்டக் காலந்தொட்டு மறைந்திருந்த ஆயிரக்கணக்கான கட்சி உறுப்பினர்கள் மீண்டும் ஒரே இடத்தில் ஒன்றிணைக்கப்பட்டமை மொட்டு தரப்பில் இருந்து கிடைத்த வெற்றியாகும்.
இம்மாநாட்டில் மீண்டும் கட்சியின் தலைவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். மாநாட்டிற்குப் பிறகு, மற்ற நிர்வாகிகள் மற்றும் அரசியல் குழுவைத் தேர்ந்தெடுப்பதற்காக கட்சியின் நிர்வாகக் குழு 16ஆம் திகதி சனிக்கிழமை காலை கூடியது.
கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. அந்தக் கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சாகர காரியவசமும் நியமிக்கப்பட்டார்.
கட்சியின் புதிய பொருளாளராக அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி நியமிக்கப்பட்டார். உத்துராவல தம்மரதன தேரரை மீண்டும் கட்சியின் தவிசாளராக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மொட்டுக் கட்சியின் நிர்வாகக்குழு பதவிகளில் மாற்றம் ஏற்படாது என கடந்த சில நாட்களாக “LEADER TV” பல தடவைகள் சுட்டிக்காட்டியிருந்தமை நினைவிருக்கலாம். இவ்வாறாகவே சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டனர். பிரதித் தேசிய அமைப்பாளர் பதவியை உருவாக்கவும் இதன்போது முன்மொழியப்பட்டுள்ளது. இந்தப் பதவிக்கு, எதிர்வரும் காலத்தில் தமிழர் மற்றும் முஸ்லிம் ஒருவரைத் தேர்வு செய்ய முடிவுசெய்யப்பட்டது.
நிர்வாகிகள் நியமனத்தின் போது பெசில் ராஜபக்ஷ வகித்துவந்த தேசிய அமைப்பாளர் பதவி வெற்றிடமாக இருந்தது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பதவியை தற்போது வெற்றிடமாக வைக்க கட்சி தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, ஊடகங்களுக்கு அறிவித்திருந்தார்.
“கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து பெசில் ராஜபக்ஷ ராஜினாமா செய்ததாக ஒரு கதை உலவுகிறது, அது உண்மையா” என, ஒரு ஊடகவியலாளர் ஒருவர் கேட்டதற்கு பதிலளித்துள்ள நாமல், “இல்லை, அவர் நிறுவனராக கட்சியின் அமைப்புப் பணிகளைச் செய்கிறார். அவர் அரசியல் சபையையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். எனவே, தேசிய அமைப்பாளர் பதவியை வெற்றிடமாக வைக்க அவரும் கட்சியும் ஒரு முடிவுக்கு வந்தனர். எதிர்காலத்தில் நாங்கள் எடுக்கும் அரசியல் முடிவுகளின் அடிப்படையில் தேவையான நபரை நியமிப்போம்” என்றார்.
மேற்படிக் கூட்டத்தின்போது இதுவரை நடக்காத சம்பவமொன்றும் நடந்துள்ளது. செயற்குழு உறுப்பினர்கள் உரிய நேரத்தில் வந்தாலும் கூட்டம் தாமதமாகியுள்ளது. தம்மிக்க பெரேராவின் வேண்டுகோளுக்கு இணங்க இது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ராகுகாலம் முடியும் வரை கூட்டத்தைத் தொடங்க வேண்டாம் என்று தம்மிகா கூறினார். எவ்வாறாயினும், தம்மிக்க எம்பியின் கோரிக்கைக்கு அனைத்து ராஜபக்ஷர்களும் இணங்கியுள்ளனர்.
அந்தக் கூட்டத்திற்குப் பிறகு நிர்வாக சபைக் கூட்டத்திற்கு வந்திருந்தவர்களில் நான்கைந்து பேர், சற்று சத்துமருந்தேற்றிக்கொள்வதற்காக கொள்ளுப்பிட்டியில் உள்ள ரெஸ்டூரண்டில் ஒன்றுகூடியுள்ளனர். இதன்போது அவர்கள் தங்களின் சைட் டிஸ்ஸாக தம்மிக்க பெரேராவையே பயன்படுத்தியுள்ளனர்.
“நேற்றைய கூட்டத்தின்போது பெரியவர், பெசில், நாமலுக்கு அருகிலேயே தம்மிக்கவுக்கும் ஆசனம் ஒதுக்கப்பட்டிருந்ததைப் பார்த்தீர்களா? கட்சியின் சிரேஷ்டர்கள் அனைவரும் பின்னுக்குத் தள்ளப்பட்டிருந்தனர், எங்கள் தரப்பினர் அனைவரும் கடும் கோபத்தில்தான் இருந்தனர். இன்றைய கூட்டம்கூட தம்மிக்கவால்தான் தாமதமானது. அந்த மனுஷனுக்கு பெசில் ஐயாவும் அதிக இடங்கொடுத்திருக்கிறார்” என்று, அங்கிருந்த ஒருவர் கூறியபோது, ராஜபக்ஷ குடும்பத்துக்கு நெருக்கமான ஒருவர் அதற்கு பதிலளித்திருக்கிறார்.
“அப்படிச் சொல்லவேண்டாம். இந்த மாநாட்டுக்கு மாத்திரம் அந்த மனுஷன் 140 இலட்சம் ரூபாயைக் கொடுத்திருக்கிறார். அந்தப் பணத்தில்தான், நாடு முழுவதிலுமிருந்து மக்களை அழைத்து வருவதற்கான பஸ்கள், சாப்பாடு அனைத்துக்கும் பணம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்த, ஆரம்பத்திலிருந்தே தனி ஆளாக தம்மிக்கதான் செலவளித்துள்ளார். அதுமாத்திரமன்றி, எமது கட்சியின் பின்வரிசை எம்பிக்களுக்கு மாதாந்தம் இலட்சக்கணக்கில் பணம் வழங்கப்படுகிறது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் அப்படிச் செலவளிக்கும் ஒருவரை முன்னுக்குக் கொண்டுவருவதில் என்ன தவறிருக்கிறது” என்று, அந்த நபர் கூறியுள்ளாராம்.
“அப்படியானால், தம்மிக்கதான் எமது கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளரா” என்று, அங்கிருந்த மற்றுமொருவர் கேட்டுள்ளார். “வேட்பாளர் வாய்ப்பு மாத்திரமல்ல, கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியையும் தம்மிக்கவுக்குத்தான் கொடுக்கவேண்டுமென்று, பெசில் ஐயா தலைவர் மஹிந்தவை வற்புறுத்துகிறாராம்” என்று, ராஜபக்ஷ குடும்பத்தின் நெருக்கமானவர் கூறியுள்ளார்.
“ஆனால் அப்படி தம்மிக்கவுக்கு ஜனாதிபதி வேட்பாளர் வாய்ப்பு வழங்கப்பட்டபல், எமது தரப்பு எம்பிக்களில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் ரணிலுடன் சேர்ந்துவிடுவார்கள் என்பதை நான் உறுதியாகச் சொல்கிறேன்” என்று, அங்கிருந்த எம்பி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அதாவது, கடந்த காலங்களில் தம்மிக்க அமைதியாக இருந்ததன் பின்னணியில் இந்த ரகசியம்தான் மறைந்திருந்ததா?
ஜனாதிபதியாகும் கனவில் அவர் ஓடிய ஓட்டம் நினைவிருக்கிறதல்லவா, ஆனால் திடீரெனக் காணாமல்போய்விட்டார். அதற்கு முன்னர், வெற்றிபெற வாய்ப்பிருந்தார் கட்டாயம் தேர்தலில் போட்டியிடுவதாகக் கூறியிருந்தார்.
அதன்பின்னர் காணாமல்போகக் காரணம், பெசிலுடன் டீல் போட்டு மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராவதற்கான வேடத்தை அணியத்தானா என்று அனைவரும் கேட்கின்றனர்.