சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுடன் திங்கட்கிழமை (11) நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளாமல் இருக்க சில கட்சிகள் தீர்மானித்துள்ளன.
இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளாமல் இருக்க ஐக்கிய மக்கள் சக்தியும், தேசிய மக்கள் சக்தியும் தீர்மானித்துள்ளன.
எனினும், இதில் கலந்துகொள்வது தொடர்பில் இலங்கை தமிழசுக் கட்சி இரண்டு நிலைப்பாடுகளில் உள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் திட்டம் தொடர்பில் அதன் உயர்மட்ட பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதற்கு எதிர்க்கட்சிகளுக்கு சந்தர்ப்பம் வழங்க ஜனாதிபதி ரணில் விக்ரசிங்க தீர்மானித்தார்.
அதன்படி, பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடலொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
இதேவேளை, சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுடன் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறும் கலந்துரையாடலில் கலந்துகொள்ளாமலிருப்பது உசிதமானதென்பதே தமது கட்சியில் பெரும்பாலானோரின் நிலைப்பாடு என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதிய பிரதிநிகளுடன் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள பேச்சுவாரத்தையில் கலந்துகொள்ளுமாறு தமக்கு அழைப்புக் கிடைத்ததாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் S.சிறிதரன் தெரிவித்தார்.
பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளும் விவகாரம் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் R.சம்பந்தனே தீர்மானிக்க வேண்டும் என தான் ஜனாதிபதி ஊடகப் பிரிவிக்கு அறிவித்ததாக அவர் கூறினார்.
எனினும், அந்த பேச்சுவார்த்தையில் தான் கலந்து கொள்ளப்போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் S.சிறிதரன் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளுமாறு தனக்கு அழைப்புக் கிடைத்ததாகவும் தான் அதில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரன் தெரிவித்தார்.
இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளுமாறு தமக்கு அழைப்புக் கிடைக்கவில்லையென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.
பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதில் ஆட்சேபனை இல்லை என்றாலும், சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு முன்பு எதிர்க்கட்சியினர் கூட்டாக சில தீர்மானங்களை எடுப்பதற்கு முன்பு கலந்தாலோசித்திருக்க வேண்டும் என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
இதேவேளை, எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள கலந்துரையாடலில் தமது கட்சி கலந்துகொள்ளாது என தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுக்குழு உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
முன்னரைப் போன்றே கட்சிகள் மீண்டும் பொறுப்புகளில் இருந்தும் சவால்களில் இருந்தும் தப்பிச் செல்லும் நிலைமை தெரிவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க பதிவிட்டுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தை தவற விடாமல் செயற்படுவது அனைத்து கட்சித் தலைவர்களினதும் பொறுப்பு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.