அடுத்த 15 வருடங்களுக்கு பொதுஜன பெரமுனவில் இருந்து ஜனாதிபதி ஒருவரை உருவாக்க முடியாது என்பதற்கு வலுவான சாத்தியக்கூறுகள் இருப்பதாலேயே நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கும் முயற்சியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஈடுபட்டுள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்களில் அறிய முடிகிறது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவுக்கு இடையில் அண்மையில் நடைபெற்ற சந்திப்பில் இந்த விடயம் தொடர்பில் ஆழமான கருத்தாடங்கள் இடம்பெற்றுள்ளதுடன், அதன் பிரகாரம்தான் நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி ஒருவரை உருவாக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக வலுவான இடத்தைப் பெறுவது பசிலின் திட்டம் உள்ளது.
அதன்படி, நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவதே இந்த நேரத்தில் சிறந்த தெரிவு என்பது பசிலின் முன்மொழிவாகும்.
நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்குவது தொடர்பில் ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்தன.
சர்வஜன வாக்கெடுப்பு மூலம் அதனை நீக்குவது இலகுவானது எனவும், அதன் பின்னர் நிறைவேற்று முறைமை அவசியமா என மக்களிடம் கேட்க முடியும் எனவும் பசில் ராஜபக்ஷ ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன் பின்னர் பிரதமர் தலைமையிலான பாராளுமன்ற முறைமைக்கு செல்ல முடியும் என பசில் ஜனாதிபதியிடம் விளக்கமளித்துள்ளார்.
நிறைவேற்று முறைமையை இல்லாதொழிக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அதனை ஐக்கிய மக்கள் சக்தியாலும் தேசிய மக்கள் சக்தியாலும் எதிர்க்க முடியாது என்பது பசிலுக்கு தெரியும்.
அடுத்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியும் பொதுஜன பெரமுனவும் இணைந்து அல்லது தனித்தனியாகப் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்குள் குறிப்பிடத்தக்களவு இடத்தை பெற முடியும் என்பது பசிலின் கணிப்பாக உள்ளது.
பசில் பல சந்தர்ப்பங்களில் ஜனாதிபதியை சந்தித்து இந்த அரசியல் குண்டை வீசியதற்கு இதுவே காரணம் என அக்கட்சியின் வட்டாரங்களில் மேலும் அறிய முடிகிறது.