Home » வன்னி மனித புதைகுழியின் சடலங்களை அடையாளம் காண ஆய்வுகள் ஆரம்பம்

வன்னி மனித புதைகுழியின் சடலங்களை அடையாளம் காண ஆய்வுகள் ஆரம்பம்

Source

முல்லைத்தீவு மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புகளின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆய்வுகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எலும்புகளை அகழ்ந்து எடுப்பதற்கு தலைமை தாங்கிய சட்ட வைத்திய அதிகாரி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

ஒரு வருடத்திற்குப் பின்னர் மீண்டும் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் ஜூலை 15, 2024 அன்று நிறைவடைந்தபோது, 52 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டிருந்தன.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான வழக்கு ஓகஸ்ட் 8ஆம் திகதி முல்லைத்தீவு நீதிவான் தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ, இந்த ஆய்வுகளின் ஊடாக, பாலினம், வயது, உயரம், காயங்கள் குறித்த தகவல்களை அறிந்துகொள்ள எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார்.

“இந்த அகழ்வின்போது எடுக்கப்பட்ட 25 எலும்புக்கூட்டு தொகுதிகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வைத்தியப் பிரிவிற்கு இடம்மாற்றப்பட்டு கடந்த 2ஆம் திகதி முதல் ஆயு்வுகள் இரண்டு நாட்கள் நடைபெற்றன. எதிர்வரும் வாரங்களிலும் தொடர்ந்து இடம்பெறும். சட்ட வைத்திய நிபுணர்களின் முழுமையான அறிக்கைககள் ஆறு மாதங்களுக்குள் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.”

தடயவில் நிபுணர்களின் முழுமையான அறிக்கை ஆறு மாத காலப்பகுதிக்குள் எதிர்பார்க்கப்படுவதாக வைத்தியர் கனகசபாபதி வாசுதேவ மேலும் தெரிவித்தார்.

புதைகுழியில் இருந்து எடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள், தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் அவசரமாக புதைக்கப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களுடையதாக இருக்க வேண்டுமென, கொக்குத்தொடுவாய் அகழ்வுப் பணிகளுக்கு முன்னோடியாக இருந்த தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ 2024 மார்ச் மாதம் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்க வேண்டுமென்ற அனுமானத்திற்கும் அவர் வந்தார்.

வெகுஜன புதைகுழி அமைந்துள்ள நிலத்தின் வரலாறு மற்றும் அகழ்வுப் பணிகள் குறித்த அவரது அவதானிப்புகள் தொடர்பிலான அறிக்கையை, அப்பகுதி கிராம உத்தியோகத்தர் நீதிமன்றில் சமர்ப்பித்ததாக, புதைகுழியின் அகழ்வுப் பணிகளை அவதானித்த சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன், ஓகஸ்ட் 8ஆம் திகதி நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

“நீதிமன்றாத்தின் கோரிக்கைகளுக்கு அமைய கொக்குத்தொடுவாய் கிராம சேவையாளரினால் அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அதே நேரம் ராஜ் சோமதேவவின் அறிக்கை ஒரு மாதத்திற்குள் கிடைக்கும் என நம்பப்படுகிறது. ஏற்கனவே எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் ஆயு்வுகள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொரன்சின் யுனிட்டில் நடைபெறுவதாக சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவ நீதிமன்றுக்கு அறிவித்திருந்தார். இந்த இடத்தை பொது மக்களிடம் கையளிப்பது தொடர்பில் அடுத்து தவணை விசாரணையில் தெரிவிப்பதாக காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.”

முன்னதாக, வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், வெகுஜன புதைகுழியில் இருந்து எடுக்கப்பட்ட எலும்புகள் காணாமலாக்கப்பட்ட தமது உறவினர்களுடையதா என்பதைக் கண்டறிய தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரி நீதிமன்றில் பல சத்தியக் கடதாசிகளை  சமர்ப்பித்திருந்தனர்.

அதற்குத் தேவையான உயிரியல் மாதிரிகள் மூன்றாம் கட்டத்திலிருந்து அகழ்வுக் குழுவால் சேகரிக்கப்பட்டு வருவதாக தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் ராஜ் சோமதேவ 11 ஜூலை 2024 அன்று ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

“மறுபுறம், இந்த சந்தர்பத்தில் காணாமல் போனவர்களை அடையாளம் காண்பதற்காக பல சத்திய கடதாசிகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கௌரவ நீதவான் தெரிவித்தார். எனவே, எதிர்காலத்தில் ஏதேனும் மரபணு பரிசோதனை செய்ய வேண்டிய நிலைமை ஏற்படுமாயின், தகுந்த மாதிரிகளைப் பெறுவதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். மிகவும் முறையான மற்றும் விஞ்ஞான ரீதியில், அதாவது ஒவ்வொரு எலும்புக்கூட்டிலிருந்தும், இந்த மூன்றாவது கட்டத்தில் பெறப்படும் ஒவ்வொரு எலும்புக்கூட்டிலிருந்தும் மாதிரியைப் பெற திட்டமிட்டுள்ளோம்.”

எலும்புக்கூடுகளின் காலப்பகுதியை அறிந்து கொள்வதற்கு இலகுவாக, அகழ்வின்போது கண்டெடுக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் சிப்பாய்களுடையது என நம்பப்படும் இலக்கத் தகடுகளின் இலக்கங்களை பத்திரிகையில் வெளியிடுமாறு, காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் சார்பில் நீதிமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டதாக சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் பிரதேச ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்

“காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் சார்பில் சில  விடயங்களை முன்வைத்திருந்தோம். சோகோ பொலிஸாரினால் எடுக்கப்பட்ட குறிப்புகள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட வேண்டுமெ கோரிக்கை விடுத்தோம். செயின் ஒப் கஸ்டடி பாதுகாக்கப்பட வேண்டுமென்றும் இந்த அகழ்வின்போது பல இலக்கத்தகடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றை நீதிமன்ற பதிவாளர் பத்திரிகைகளில் பிரசுரிக்க வேண்டுமென்றும். இலக்கங்கள் அதனுடன் இணைந்த போராளிகளுக்கும் உறவினர்களுக்கும் குடும்பத்தினருன்கும் தெரியும் என்ற அடிப்படையில் இந்த தகவல்களை நீதிமன்றத்திற்கு தெரிவிப்பதன் மூலம் காலப்பகுதிகளையும் கண்டறிவதற்கு இலகுவாக இருக்குமென தெரிவித்தோம்.”

2023 ஆம் ஆண்டு ஜூன் மாத இறுதியில், கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்திலிருந்து கொக்கிளாய் நோக்கி சுமார் 200 மீற்றர் தொலைவில், நீர் வழங்கல் திணைக்கள ஊழியர்கள் நீர் குழாய்களை அமைப்பதற்காக நிலத்தை தோண்டிக் கொண்டிருந்த போது, மனித உடல் பாகங்கள் மற்றும் ஆடைத் துண்டுகள் வெளிப்பட்டன.

கொக்குத்தொடுவாய் புதைகுழி தொடர்பான வழக்கு எதிர்வரும் செப்டெம்பர் 27ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image