வயிற்றுப் பசிக்கு கட்சி-பேதம் கிடையாது என ஜனாதிபதி தெரிவிப்பு.
மக்களின் பசிக்கு அரசியல் பேதங்கள் இல்லை என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களின் பசியைப் போக்கவும் சீர்குலைந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும் தாம் முதலில் சஜித் பிரேமதாசவிற்கும், அனுர குமார திஸாநாயக்காவிற்குமே அழைப்பு விடுத்ததாக ஜனாதிபதி கூறினார்.
ஆனால், நாட்டிற்குத் தேவையான சந்தர்ப்பத்தில் அவர்கள் மறைந்திருந்ததாகவும் இவ்வாறான நிலையில் தனக்கு மூன்று பெண்களின் ஒத்துழைப்பு கிடைத்ததாகவும் ஜனாதிபதி கூறினார்.
கொழும்பில் இடம்பெற்ற மாநாடொன்றில் கலந்து கொண்டு அவர் இது பற்றி கருத்து வெளியிட்டார்.
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அமெரிக்க திறைசேரியின் செயலாளர் ஜெனட் யெலன், சர்வதேச நாணய நிதியத்தின் தலைவி கிறிஸ்டலினா ஜோர்ஜிவா ஆகியோர் தமக்கு உதவியதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.
உர நெருக்கடிகளை எதிர்நோக்கியிருந்த நாட்டின் விவசாயத்துறையை மீண்டும் கட்டியெழுப்ப சமந்தா பவர் வழங்கிய ஒத்துழைப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பும் தற்சமயம் வலுவடைந்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.