வலுசக்தித் துறையின் இலக்குகளை துரிதப்படுத்த வேண்டும்.
நாட்டின் வலுசக்தித் துறை சார்ந்த இலக்குகளை எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் அடைந்து கொள்வதற்கான வேலைத்திட்டங்களை முறையான விதத்தில் துரிதப்படுத்தப்படுத்துவது அவசியம் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
வலுசக்தி அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் இது பற்றி கருத்து வெளியிட்டார். பொதுமக்களின் சொத்துக்களைப் பாதுகாக்கும் பொறுப்பு ஜனாதிபதியைப் போன்று அரச ஊழியர்களுக்கும் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதனால் பிரஜைகள் திருப்தியடையக்கூடிய அரச சேவைக்காக பணியாற்றுவது அவசியமாகும். பொருளாதார நெருக்கடிக்குப் பின்னால் ஊழல் மோசடி, வீண்விரயம் என்பன முக்கிய காரணங்களாக இருந்ததாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இதனைத் தடுப்பதற்கு மக்கள் இம்முறை தமக்கான ஆணையை வழங்கியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அரச சேவையில் காணப்படும் ஊழல் மோசடிகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கென மக்கள் வழங்கிய ஆணையை தாம் பாதுகாக்க இருப்பதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.
வலுசக்தித் துறை சார்ந்த தற்போதைய வேலைத்திட்டங்கள் பற்றியும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்குள் வலுசக்தித் துறை சார்ந்த இலக்குகளை பூர்த்தி செய்வதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் பற்றியும் மக்களுக்கு வழங்கக்கூடிய குறுங்கால, நீண்டகால நிவாரணங்கள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.