வெடுக்குநாறிமலை ஆலயப் பிரச்சினை – ஒன்றுகூடி ஆராயத் தமிழ் எம்.பிக்களுக்கு விக்கி அழைப்பு
வெடுக்குநாறிமலை ஆலயப் பிரச்சினை தொடர்பாக ஒன்றுகூடி ஆராய்வதற்குத் தமிழ்த் தேசியம் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.
வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலையில் கடந்த மகா சிவராத்திரி தினத்தன்று வழிபாடுகளை மேற்கொண்டவர்களைப் பொலிஸார் கடுமையாகத் தாக்கிக் கைது செய்திருந்தனர். ஆலயப் பூசகர் உட்பட 8 பேர் எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமளியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இது தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை ஆராயும் விதமாகத் தமிழ்த் தேசியம் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், வரலாற்றுப் பேராசிரியர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.
எதிர்வரும் 16 ஆம் திகதி முற்பகல் 11 மணியளவில் யாழ்ப்பாணம், நல்லூர், கோயில் வீதியில் அமைந்துள்ள தனது இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாட வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், புளொட்டின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், வரலாற்றுத்துறை வாழ்நாள் பேராசிரியரும் யாழ். பல்கலைக்கழக வேந்தருமாகிய பத்மநாதன், வரலாற்றுத்துறை வாழ்நாள் பேராசிரியர் புஷ்பரட்ணம் ஆகியோருக்கு மின்னஞ்சல் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“மகா சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறிமலை சம்பவங்கள் அரசின் இரகசிய நோக்கங்களை எமக்குச் சுட்டிக்காட்டியுள்ளன.
இந்தநிலையில் எமது தமிழ் அரசியல் தலைவர்கள் ஒன்றுகூடி எமது அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் தீர்மானிப்பது அவசியமாகும்.
நாடாளுமன்றத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்று கோரிக்கை ஒன்றும் விடுக்கப்பட்டுள்ளது. ஒரு சிலர் நாடாளுமன்றத்துக்குள் ஒரு போராட்டம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர். நாம் எடுக்கும் எந்த நடவடிக்கையாக இருப்பினும் அவை ஒன்றுபட்ட முயற்சியாக இருக்க வேண்டியது அவசியம்.
அமைச்சரின் வேண்டுகோளுக்கேற்ப வெடுக்குநாறிமலை சம்பவம் தொடர்பில் ஆராய ஜனாதிபதி குழுவொன்றை நியமிப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இந்தக் குழுவில் அங்கம் வகிக்கவுள்ளவர்களின் பெயர்கள் தெரியவில்லை.
எனவே, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சந்திப்பின்போது பேராசிரியர் பத்மநாதன் மற்றும் பேராசிரியர் புஷ்பரட்ணம் ஆகியோருக்கும் அழைப்பு அனுப்பியுள்ளேன்.
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் சம்பவ இடத்தில் இருந்ததாலும், பெறுமதியான தகவல்களை வழங்கக்கூடியவர் என்பதாலும் அவரையும் அழைத்துள்ளேன். சுமந்திரன் கைது செய்யப்பட்டவர்களுக்காக நீதிமன்றில் ஆஜராகியிருப்பதால் எமக்கு மதிப்புமிக்க ஆலோசனைகளை வழங்க முடியும் என்ற வகையில் அவரையும் அழைத்துள்ளேன்.
எதிர்வரும் 16ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 11 மணிக்கு 232, கோயில் வீதி, நல்லூரில் உள்ள எனது இல்லத்தில் சந்திப்போம் என்று பரிந்துரைக்கின்றேன். எங்களுடன் இணைவீர்களா எனத் தெரிவிக்கவும்.
மேலும் கடந்த திங்கட்கிழமை நல்லூரில் நடைபெற்ற போராட்டத்தில் பல் பிடுங்கப்பட்டதால் என்னால் பங்கேற்க முடியவில்லை.” – என்றுள்ளது.