வெற்றிகளைப் பாதுகாத்து முன்னோக்கிச் செல்ல தேர்தலை பயன்படுத்துமாறு ஜனாதிபதி கோரிக்கை
தேர்தலை ஒன்றை கோரி நீதிமன்றத்திற்குச் சென்றவர்களின் நோக்கம் மக்களை அடக்குமுறையிலிருந்து விடுவிப்பதற்காக அல்ல என்றும், எவரும் ஏற்றுக்கொள்ள விரும்பாத நாட்டைக் பொறுப்பேற்றுக்கொண்ட போது தமது அதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்காகவே என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தம்புள்ளை பொது சந்தை கட்டிடத்தொகுதி வளாகத்தில் நேற்று; நடைபெற்ற இயலும் ஸ்ரீலங்கா மாத்தளை மாவட்ட வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம், மக்களுக்காக இந்த நாட்டின் பொறுப்பை ஏற்று, நாட்டில் நிலவும் சிக்கலான சூழ்நிலையை முடிவுக்கு கொண்டு வந்து பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தினேன். இன்று, நாட்டு மக்களுக்காகவே சுயேட்சை வேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
தொலைநோக்குப் பார்வையும் வேலைத்திட்டமும் இல்லாமல் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ளும் நோக்கத்தை மாத்திரம் கொண்ட குழுவினரிடம் இந்நாட்டை ஒப்படைத்தால் நாடு அழிவதைத் தடுக்க முடியாது என்று ஜனாதிபதி தெரிவித்தார். எனவே இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் கடந்த இரண்டு வருடங்களாக கஷ்டப்பட்டு பெற்ற வெற்றிகளைப் பாதுகாத்து முன்னோக்கிச் செல்ல தமது வாக்குகளைப் பயன்படுத்த வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் உட்பட பத்து போக்குவரத்து சங்கங்களின் பிரதிநிதிகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளனர். கொழும்பில் உள்ள ஜனாதிபதியின் அரசியல் நடவடிக்கை காரியாலயத்தில் அந்த சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. அதன்போதே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர். தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன உட்பட பஸ் சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டனர்.
எரிபொருளின்றி தாம் எதிர்கொண்ட பிரச்சினைகளை மறக்கவில்லை எனவும், மீண்டும் அவ்வாறானதொரு யுகம் அவசியம் இல்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். நாட்டை மீட்டெடுக்க ஜனாதிபதி ஆற்றிய பணியை தனியார் பஸ் சங்கப் பிரதிநிதிகள் நன்றியுடன் நினைவு கூர்ந்தனர். பஸ் போக்குவரத்து துறை எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பான கோரிக்கைகளும்; ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டன. அவற்றிற்கான தீர்வுகள் உடனடியாக வழங்கப்படும் என ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.