Home » வேட்பாளர்கள் சிலரின் இறுதிப் பிரச்சாரங்களிலிருந்து..

வேட்பாளர்கள் சிலரின் இறுதிப் பிரச்சாரங்களிலிருந்து..

Source

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்திருக்கின்றன. இந்நிலையில் இறுதி பிரச்சார மேடைகளில் தோன்ன்றிய வேட்பாளர்கள் சிலரின் உரைகளிலிருந்து..

திலித் ஜயவீர:

தாய்நாட்டை பாதுகாக்கும் வேலைத்திட்டம் தன்னிடம் இருப்பதாக ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். கொட்டாவ பிரதேசத்தில் இடம்பெற்ற பேரணியில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார். பழைமைவாத ஊழல் அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும். மக்கள் இன்னும் ஒடுக்கப்படுகிறார்கள். திருட்டை ஒழிப்போம் என்று அறிவித்து அதிகாரத்தைக் கோரும் திருடர்கள் கூட்டம்தான் தற்போதைய அரசியலில் இருப்பதாகவும் திலித் ஜயவீர குறிப்பிட்டார்.

விஜயதாச ராஜபக்ஷ:

நாடு மட்டுமன்றி அரசியல் கட்சிகளும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அக்கரைப்பற்று பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இந்த ஜனாதிபதி தேர்தலில் 2 ஊழல் குழுக்கள் போட்டியிடுவது மாத்திரமே இடம்பெறுகின்றது. எந்தக் கட்சிக்கும் அடிமையாக இருக்கக் கூடாது என்பதற்காகவே தனது கொள்கையை முன்வைத்துள்ளதாகவும் விஜயதாச ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

சரத் பொன்சேகா:

நாளை சந்ததியினரின் எதிர்காலம் குறித்து சிந்தித்து தீர்மானங்களை எடுக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார். ஊழல் நிறைந்த சமுதாயத்தை அவர்களிடம் ஒப்படைக்கக் கூடாது. அப்படி ஒரு நாடு உருவானால் அதற்கு மூத்த சமூகம் பொறுப்பேற்க வேண்டும். நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்ல தியாகங்கள் செய்ய வேண்டும். ஊழல் அரசியல்வாதிகளை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவதன் மூலம் நாட்டின் நெருக்கடிகள் மேலும் மோசமடையலாம் எனவும் சரத்  பொன்சேகா குறிப்பிட்டார்.

அரியநேத்திரன்:

பல வழிகளிலும் போராடி பலதையும் இழந்திருக்கின்ற தமிழ் மக்களின் உரிமைகளுக்காக இன்று ராஜதந்திர ரீதியாக போராட வேண்டியிருப்பதாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அரியநேந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று யாழ்ப்பாணம் சங்கிலியன் தோப்பில் இடம்பெற்ற இறுதிப்பிரசார கூட்டத்தில் உரையாற்றிய போது தாம் இப்போது முன்னெடுத்திருக்கும் போராட்டம் பதவிக்கானது அல்லவெனவும் அவர் குறிப்பிட்டார். திரு.அரியநேந்திரன் சங்கு சின்னத்தில் போட்டியிடுகிறார்.

மயில்வாகனம் திலகராஜ்:

மலையக நலனுக்காக உழைத்த முன்னோடிகள் போன்று சமூக நலனுக்காக பாடுபட இளைஞர் யுவதிகள் முன்வர வேண்டும் என சுயேட்சை வேட்பாளர் மயில்வாகனம் திலகராஜ் கோரிக்கை விடுத்தார். சிறகு சின்னத்தில் களமிறங்கும் திலகராஜ், தாம் வெல்லவதற்காக அன்றி, மலையக மக்களின் பிரச்சினைகளை எடுத்துரைப்பதற்காகவே தேர்தல் பிரசார களத்தை பயன்படுத்திக் கொண்டதாக குறிப்பிட்டார்.

ரொஷான் ரணசிங்க:

நாட்டின் உற்பத்திக் கைத்தொழில்களை மேம்படுத்துவதன் மூலம் பொருட்களின் இறக்குமதியை நிறுத்த முடியும் என ஜனாதிபதி வேட்பாளர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். இதன் மூலம் நாட்டின் அன்னியச் செலாவணியை மிச்சப்படுத்துவதுடன் வேலை வாய்ப்புகளையும் உருவாக்க முடியும். இறக்குமதியை குறைத்து உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். அரசாங்கம் என்ற வகையில் அந்த உறுதிமொழியை வழங்குவது முக்கியம். தமது அரசாங்கத்தின் கீழ் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 11 வீதத்தால் அதிகரிக்கும் எனவும் ரொஷான் ரணசிங்க குறிப்பிட்டார்.

சிறிதுங்க ஜயசூரிய: 

சர்வதேச நாணய நிதியத்துடனான கொடுக்கல் வாங்கல்களால் உலகில் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்துள்ளார். எனவே, சர்வதேச நாணய நிதியுடன் தற்போதுள்ள பரிவர்த்தனைகளை நிறுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இந்த ஜனாதிபதித் தேர்தலில் பொருத்தமற்ற ஒருவருக்கு ஆணை வழங்கினால் மீண்டும் பிரச்சினைகள் எழலாம். பிரதான அரசியல் வேட்பாளர்களால் வழங்கப்படும் வாக்குறுதிகளை அவர்களால் நிறைவேற்ற முடியாது எனவும் சிறிதுங்க ஜயசூரிய குறிப்பிட்டார்.

சங்கைக்குரிய அக்மீமன தயாரதன தேரர்:

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் மீண்டும் வருந்தாத வகையில் தமது வாக்குகளைப் பயன்படுத்த வேண்டுமென ஜனாதிபதி வேட்பாளர் சங்கைக்குரிய அக்மீமன தயாரதன தேரர் தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க இடமளிக்க வேண்டும். எனினும் தேசிய மக்கள் சக்தி வன்முறையை பரப்புவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

கீர்த்தி விக்ரமரத்ன:

நாட்டின் கைத்தொழில்களை வலுப்படுத்துவதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குவதே தமது இலக்கு என ஜனாதிபதி வேட்பாளர் கீர்த்தி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். ஒரு அரசாங்கத்தை உருவாக்குவதன் மூலம், மக்கள் ஒரு நல்ல நாட்டைக் கட்டியெழுப்ப எதிர்பார்க்கிறார்கள். நாட்டின் வருவாய் ஆதாரங்கள் பலப்படுத்தப்பட வேண்டும். ஆனால் சில அரசியல்வாதிகள் தங்கள் பதவிக்காலம் முழுவதும் அரசியல் மட்டுமே செய்திருக்கிறார்கள். நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் பொறுப்பை அவர்கள் புறக்கணித்துள்ளதாகவும்  கீர்த்தி விக்ரமரத்ன குறிப்பிட்டார்.

ஓஷல ஹேரத்:

1977ஆம் ஆண்டு முதல் இன்று வரையில் ஆட்சியில் இருந்த ஜனாதிபதிகளின் கவனக்குறைவான செயற்பாடுகளினால் நாடு அவ்வப்போது வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டதாக ஜனாதிபதி வேட்பாளர் ஓஷல ஹேரத் தெரிவித்துள்ளார். சர்வதேச சமூகம் கூட நாடு வங்குரோத்து அடைந்துவிட்டதாக அறிவித்தது. அடுத்து வரும் ஜனாதிபதியால் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாவிட்டால் மீண்டும் பிரச்சினைகள் அதிகரிக்கலாம். நாட்டின் பிரச்சினைகளை உருவாக்கியவர்கள் அவற்றைத் தீர்க்கும் திறன் கொண்டவர்கள் அல்ல எனவும் ஓஷல ஹேரத் குற்றம் குறிப்பிட்டார்.

நுவான் போபகே:

பசுமைப் புரட்சிக்குப் பின்னர் பன்னாட்டு நிறுவனங்கள் விவசாய இரசாயனங்களை அறிமுகப்படுத்தி இந்த நாட்டின் ஒட்டுமொத்த சூழலியல் அமைப்பையும் இலாப நோக்கத்திற்காக அழித்ததாக ஜனாதிபதி வேட்பாளர் நுவான் போபகே தெரிவித்துள்ளார். இதனால், நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தொற்றாத நோய்களும் அதிகரித்துள்ளன. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மிகக் குறைந்த சதவீதமே ஆராய்ச்சிக்காக ஒதுக்கப்படுகிறது என அவர் குறிப்பிட்டார். முதலாளித்துவ பொருளாதாரத்தை மாற்ற வேண்டியதன் அவசியத்தை நுவான் போபகே சுட்டிக்காட்டினார்.

சரத் மனமேந்திர:

கப்பம், கொள்ளைக்கு பதிலாக ஒருவரையொருவர் மதிக்கும் ஒழுக்க கலாச்சாரத்தை உருவாக்க வேண்டும் என ஜனாதிபதி வேட்பாளர் சரத் மனமேந்திர தெரிவித்துள்ளார். அந்த பணிகளை நிறைவேற்றவே இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிடுவதாக அவர் குறிப்பிட்டார். ஏற்றுமதி பொருளாதாரத்தை இலக்காகக் கொண்ட அறிவியல் திட்டம் தயாரிக்கப்பட வேண்டும். இந்த நாட்டில் ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு ஜனாதிபதியும் தனக்கு நெருக்கமானவர்களை மகிழ்விப்பதற்காகவே செயற்பட்டுள்ளனர் என சரத்; மனமேந்திரா குறிப்பிட்டார்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image