ஸிம்பாப்வே அணி ரி-ருவென்டி கிரிக்கெட்டில் உலக சாதனை
ஸிம்பாப்வே அணி ரி-ருவென்டி கிரிக்கெட் போட்டியில் இரண்டு உலக சாதனைகளை நிலைநாட்டியுள்ளது. அடுத்த ஐ.சி.சி ரி-ருவென்டி கிரிக்கெட் தொடர் 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது.
அதற்கான தகுதிகாண் போட்டிகள் தற்சமயம் நடைபெற்று வருகின்றன. அதில் ஆபிரிக்க கண்டத்திற்கான தகுதிகான் போட்டிகள் நைரோபில் நடைபெற்று வருகிறது.
இதில் பி பிரிவில் நடைபெற்ற 12ஆவது போட்டியில் ஸிம்பாப்வே மற்றும் காம்பியா அணிகள் பங்கேற்றன. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஸிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி, அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 344 ஓட்டங்களை குவித்தது. துடுப்பாட்டத்தில் அணித்தலைவர் சிக்கந்த ராசா 43 பந்துகளில் 133 ஓட்டங்களைப் பெற்றார்.
இதன்மூலம் சர்வதேச ரி-ருவென்டி போட்டியில் அதிக ஓட்டங்களை குவித்த அணியாக ஸிம்பாப்வே அணி உலக சாதனை படைத்தது.
பின்னர் 345 என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய காம்பியா அணி 14.4 ஓவர்களில் 54 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன்மூலம் ஸிம்பப்வே அணி 290 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இதன்மூலம் ரி-ருவென்டி போட்டியில் அதிக ஓட்டங்களால் வெற்ற அணியாகவும் ஸிம்பாப்வே உலக சாதனை படைத்துள்ளது.