ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக, நாமல் ராஜபக்ச!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
சற்று முன்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகமான நெலும் மாவத்தையில் வைத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. பசில் ராஜபக்ஷ உட்பட முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வரான நாமல் ராஜபக்ஷ, 2010ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளராக ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிட்டு முதல் தடவையாக பாhராளுன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.
அவர் 2020ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பணியாற்றினார்.
இதன்போது கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தம்மீது நம்பிக்கை வைத்து, தமக்கு இந்தப் பொறுப்பை வழங்கியமை தொடர்பில் கட்சியின் அரசியல் சபை மற்றும் கட்சியின் தலைவர்களுக்கு நன்றி கூறுவதாகக் குறிப்பிட்டார்.
சவாலுக்கு தயார் எனவும், ஆதரவாளர்கள் எமது கொள்கையின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
இளம் தலைமுறையினர் எதிர்பார்க்கும் நவீன சக்தியாக இளைஞர்களின் அபிலாஷைகளை நனவாக்கும் வகையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன செயற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
கட்சியில் இருந்து விலகியவர்களை மீண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணையுமாறும் நாமல் ராஜபக்ஷ அழைப்பு விடுத்தார்.