விஜயதாச ராஜபக்ஷவின் மகன் ரகித ராஜபக்ஷ உள்ளிட்ட மூவர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான நந்துன் சிந்தக விக்ரமரத்ன என்பவரின் மனைவியிடமிருந்து ரூ.1,200 இலட்சம் (ரூ.12 கோடி) லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் காலப்பகுதியில், அப்போதைய நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவும் துபாயில் தங்கியிருந்ததாக இலங்கை லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு நேற்று (03) நீதிமன்றத்தில் தெரிவித்தது.
ஆணைக்குழுவின் உதவி சட்டப் பணிப்பாளர் அனுஷா சம்பந்தப்பெரும இந்த தகவலை மேலதிக விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கும் போது வெளியிட்டார்.
அவர் நீதிமன்றத்தில் தெரிவித்ததாவது:
- சந்தேகநபர்கள் மூவரும் 2023 மார்ச் 25ஆம் திகதி துபாய் சென்று, மார்ச் 29ஆம் திகதி இலங்கைக்கு திரும்பியுள்ளனர்.
- அதே காலத்தில், இரண்டாவது சந்தேகநபரான ரகித ராஜபக்ஷவின் தந்தை விஜயதாச ராஜபக்ஷவும் துபாயில் இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
- அவர் மார்ச் 21ஆம் திகதி துபாய் சென்றிருந்ததுடன், சந்தேகநபர்கள் இலங்கைக்கு திரும்புவதற்கு ஒரு நாள் முன்பான மார்ச் 28ஆம் திகதி நாடு திரும்பியுள்ளார்.
- அவர் துபாய் சென்ற காரணம், அங்கு யாரைச் சந்தித்தார், இந்தச் சம்பவத்துடன் அவருக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், ரூ.1,200 இலட்சம் லஞ்சத் தொகையில் ரூ.200 இலட்சம் திருப்பி வழங்கப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அந்த தொகையை முதல் சந்தேகநபரான சரித் அபேசிங்க, லசந்த என்ற நபரிடம் வழங்கியதுடன், அது மிதிகம ருவன் என்ற நபர் மூலம் நிர்மல பண்டார (ஹெர்பி) வழியாக ஹரக் கட்டாவின் மனைவி மதுவந்திக்கு அனுப்பப்பட்டதாக ஆணைக்குழு தெரிவித்தது.
இந்த ரூ.200 இலட்சம் நுகேகொட, நாவலா வீதி, விஜயபா மாவத்தையில் வழங்கப்பட்டதாகவும், அந்த இடமே விஜயதாச ராஜபக்ஷவின் இல்லம் அமைந்துள்ள இடம் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்துடன், லஞ்சமாகப் பெறப்பட்ட பணம் “உண்டியல்” (Undiyal/Hawala) முறையின் மூலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாகவும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஊழல் தடுப்புச் சட்டத்தின் 149(1) பிரிவின் கீழ் விசாரணை நிறைவடையும் வரை சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தது.
இதன்போது, சரித் அபேசிங்க, ரகித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் இலங்கை சிவில் விமான சேவைகள் ஆணையம் இயக்குநரான வருஷ ஹென்னடிகே அருண ஸ்ரீ சதுரங்க ஆகியோருக்காக ஆஜரான சட்டத்தரணிகள் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்து, அவர்களுக்கு பிணை வழங்குமாறு கோரினர்.
எனினும், பிணை வழங்குவதற்கான விசேட காரணங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை எனக் குறிப்பிட்ட அசங்க எஸ். போதரகம, சந்தேகநபர்கள் மூவரையும் ஜூலை 17ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
The post 12 கோடி விவகாரம்-விஜயதாச ராஜபக்ஷ துபாய் சென்றது ஏன்? appeared first on LNW Tamil.