130 சர்வதேச பிரதிநிகள் முன்னிலையில் திருக்குறளின் பெருமையை எடுத்துக் கூறிய கிழக்கு ஆளுநர்
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொணடு சீனாவிற்கு சென்ற கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சீனா, அமெரிக்கா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் உயர்மட்ட இராஜதந்திரிகள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடினார்.
ஐக்கிய நாடுகள் சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையான அபிவிருத்தி இலக்குகளின் (SDG) அபிவிருத்திகள் மற்றும் பாகிஸ்தானில் உள்ள இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து சிந்து மாகாண முதலமைச்சர் மக்பூல் பக்காருடன் கிழக்கு மாகாண ஆளுநர் கலந்துரையாடினார்.
பாகிஸ்தானில் உள்ள இலங்கை சமூகத்திற்கு தனது முழு உதவியையும் வழங்க சிந்து மாகாண முதலமைச்சர் இணங்கியதுடன், பாகிஸ்தானில் உள்ள சிந்து மாநிலத்திற்கு வருகைத் தருமாறு கிழக்கு ஆளுநருக்கு உத்தியோகபூர்வ அழைப்பையும் விடுத்துள்ளார்.
இதேவேளை, அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில செனட்டின் பெரும்பான்மைத் தலைவர் ரொபர்ட் மைல்ஸ் ஹெர்ட்ஸ்பெர்குடன் கிழக்கு ஆளுநர் கலந்துரையாடியதுடன் நாகரிகப் பரிமாற்றம் குறித்து ஆளுநர் எடுத்துரைத்த முக்கியப் புள்ளிகளில் ஈர்க்கப்பட்டார்.
பெய்ஜிங்கில் நடைபெற்ற ‘பெல்ட் அண்ட் ரோட்’ மன்றத்தில் 130 நாடுகளைச் சேர்ந்த சர்வதேச பிரதிநிதிகள் முன்னிலையில் உரையாற்றிய கிழக்கு மாகாண ஆளுநர் தமிழ் திருக்குறளை மேற்கோள்காட்டி நாகரிக பரிமாற்றத்தின் முக்கியத்துவம் மற்றும் அண்டை நாடுகளுக்கு இடையே ஆயுதக் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க அனைத்து நாடுகளும் ஒன்றிணைவதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.
இலங்கையை நெருக்கடியிலிருந்து மீட்டு முன்னேற்றி சுபீட்சத்தை நோக்கி புதிய பாதையில் கொண்டு செல்வதில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்ற நாடுகளுக்கு முன்மாதிரியாக திகழ்கிறார் என்றும் மனிதர்களுக்கு பாதுகாப்பான இடமாக உள்ள உலகம் பல்வேறு பகுதிகளில் சமீபத்தில் நடந்த போர்களால் இன்று வாழ்வதற்கு மிகவும் பாதுகாப்பற்ற இடமாக மாறியுள்ளதாக ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, பெய்ஜிங்கில் சர்வதேச பிரதிநிதிகளுக்கான மூன்றாவது ‘பெல்ட் அண்ட் ரோட்’ மன்றத்தின் வரவேற்பு விருந்திலும் கிழக்கு ஆளுநர் கலந்து கொண்டார்.