20 சீன பிரஜைகள் பாணந்துறையில் கைது.
பாணந்துறை – கொராக்கனவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த 20 சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, பாணந்துறை வடக்கு பொலிஸ் அதிகாரிகள் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து ஐந்து மடிக்கணினிகள், 437 கையடக்கத்தொலைபேசிகள், தராசு, 323 யு.எஸ்.பி கேபிள்கள், 133 கையடக்கத்தொலைபேசிகளுக்கான மின்னேற்றிகள், 17 ரவுட்டர்கள் உள்ளிட்ட பல பொருட்கள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.
அவர்கள் 20 இலட்சம் ரூபா மாத வாடகை அடிப்படையில் ஹோட்டலில் தங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளுக்காக, இவர்கள் பாணந்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இதேவேளை, ஜாஎல முத்துராஜவெல – உஸ்வெட்டகெஹியவா பிரதேசத்தில் பாரியளவில் நடத்தப்பட்டு வந்த சட்டவிரோத மதுபானசாலை ஒன்றை கலால் திணைக்கள அதிகாரிகள் சுற்றிவளைத்துள்ளனர்.
அதன்போது, 50 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதி கொண்ட மதுபானம் மற்றும் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட ஐயாயிரம் மதுபான போத்தல்களும், 50ற்கும் மேற்பட்ட பீப்பாய்களும் அங்கு காணப்பட்டதாக மேல்மாகாண உதவி கலால் ஆணையாளர் ஜெயந்த சில்வா தெரிவித்தார்.
கலால் ஆணையாளர் நாயகம் நிஷாந்த ஜயவீரவின் பணிப்புரைக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.