உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 18ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நீதித் துறையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து, அதன் செயற்பாடுகளை திறம்பட முன்னெடுக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் ஒரு நேர்மறையான நடவடிக்கையாகவே இந்தச் சட்டமூலம் அமையும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், இந்தச் சட்டமூலத்திற்கு நீதிச்சேவை சங்கம், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், எதிர்க்கட்சியின் பெரும்பாலான அரசியல் கட்சிகள், ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் மற்றும் மகாநாயக்க தேரர்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இந்த அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட பின்னர், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 65 இலிருந்து 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 63 இலிருந்து 65ஆகவும் உயர்த்தப்படும்.
இலங்கை அரசியலமைப்பின் 121ஆவது பிரிவின் கீழ், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் ஒரு சட்டமூலத்தை (முதல் வாசிப்பு) உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்துவதற்கு 14 நாட்கள் அவகாசம் உள்ளது.
அவ்வாறு தாக்கல் செய்யப்படும் மனுக்களை விசாரித்து 3 முதல் 21 நாட்களுக்குள் உயர் நீதிமன்றம் தனது தீர்மானத்தை நாடாளுமன்றத்திற்கு அறிவிக்க வேண்டும்.
இந்த சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அதிகளவிலான மனுக்களைத் தாக்கல் செய்ய இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும் பல்வேறு சிவில் அமைப்புகளும் எதிர்பார்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
The post 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் 18ஆம் திகதி நாடாளுமன்றத்தில் appeared first on LNW Tamil.