40 இலட்சம் வாக்குச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதித் தேர்தலுக்கான 40 இலட்சம் உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் அறிவித்துள்ளது. அந்த வாக்குச் சீட்டுகளை விநியோகிக்கும் விசேட தினமாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாலை 6 மணி வரை உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டுகள் விநியோகிக்கப்படும். அவற்றை பெற்றுக் கொள்வதற்காக மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு பிரதி தபால் மாஅதிபர் ராஜித ரணசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வாக்குச்சீட்டு விநியோகம் எதிர்வரும் சனிக்கிழமையுடன் நிறைவடையும். அந்தத் திகதிக்கு பின்னர், வீடுகளுக்குச் சென்று வாக்குச் சீட்டு விநியோகிக்கப்பட மாட்டாது.
ஆனால், தேர்தல் தினம்; வரை தாம் கடிதங்களைப் பெற்றுக் கொள்ளும் தபால் நிலையத்திற்குச் சென்று அடையாளத்தை உறுதிப்படுத்தி, வாக்குச்சீட்டை பெற்றுக் கொள்ள முடியும் என பிரதி தபால் மாஅதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார்.
இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இரண்டாயிரத்து 863 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 23 வன்முறைச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
கடந்த ஜூலை 30ஆம் திகதி முதல் இதுவரை இந்த முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இரண்டாயிரத்து 113 முறைப்பாடுகளின் விசாரணைகள் நிறைவடைந்துள்ளன.
மேலும் 750 முறைப்பாடுகளை விசாரிக்க ஆரம்பித்துள்ளதாக ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆயிரம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பெஃபரல் அமைப்பு தெரிவித்துள்ளது.