9ஆவது ஜனாதிபதியாக அனுர குமார திசாநாயக்க தெரிவு.
இலங்கை ஜனநாயக சோஷலிஸ குடியரசின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுர குமார திசாநாயக்க, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.
கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கூடுதலான வாக்குகளைப் பெற்று, அவர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.
இலங்கை ஜனநாயக சோஷலிஸ குடியரசின் 9ஆவது ஜனாதிபதியாக அனுர குமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் R.M.A.L ரத்நாயக்க உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தலின் முதலாவது கட்டத்தில் எந்தவொரு வேட்பாளரும் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற தவறியமையினால் இரண்டாம்,
மூன்றாம் விருப்பு வாக்குகளை எண்ணும் நடவடிக்கை இடம்பெற்றது. ஜனாதிபதித் தேர்தல் ஒன்றில் முதற்தடவையா இவ்வாறானதொரு செயற்பாடு இடம்பெற்றதாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கு அமைய இரண்டாம் கட்ட விருப்பு வாக்குகளுக்கு அமைய சஜித் பிரேமதாச ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 867 வாக்குகளையும் அனுர குமார திசாநாயக்க ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 264 வாக்குகளையும் பெற்றிருந்தார்கள்.
மொத்த வாக்குகளின் அடிப்படையில் அனுர குமார திசாநாயக்க 57 லட்சத்து 40 ஆயிரத்து 179 வாக்குகளைப் பெற்றிருந்தார். சஜித் பிரேமதாச 45 லட்சத்து 30 ஆயிரத்து 902 வாக்குகளைத் தக்கவைத்தமை முக்கிய அம்சமாகும்.
ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தலில் எந்தவொரு மோசமான வன்முறையும் இடம்பெறவில்லை என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் R.M.A.L. ரத்நாயக்க சுட்டிக்காட்டினார்.
அமைதியாகவும் சுதந்திரமாகவும் தேரத்லை நடத்த ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
நாட்டின் 22 தேர்தல் மாவட்டங்களில் 15 மாவட்டங்களின் அதிகாரத்தை அனுர குமார திசாநாயக்க உறுதிப்படுத்தினார்.
அனுராதபுரம், பொலநறுவை, குருநாகல், புத்தளம், கம்பஹா, கேகாலை, கண்டி, மாத்தளை, கொழும்பு, இரத்தினபுரி, காலி, களுத்துறை, ஹம்பாந்தோட்டை, மொனறாகலை மாவட்டங்களில் அனுர குமார திசாநாயக்க வெற்றிபெற்றார்.
முதற்கட்ட வாக்களிப்பில் அனுர குமார திசாநாயக்க 42 தசம் ஒரு சதவீதமான வாக்குகளையும் சஜித் பிரேமதாச 32 தசம் 6 சதவீதமான வாக்குகளையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அனுர குமார திசாநாயக்க அனுராதபுர மாவட்டத்தின் தம்புத்தேகம என்ற இடத்தில் பிறந்தார்.
பாடசாலைக் கல்வியை தமது சொந்த ஊரில் பூர்த்தி செய்த அவர், பேராதனை, பல்கலைக்கழகத்திலும் களனி பல்கலைக்கழகத்திலும் உயர்கல்வியைத் தொடர்ந்தார்.
1995ஆம் ஆண்டில் களனி பல்கலைக்கழகத்தில் இருந்து பௌதீக விஞ்ஞான பட்டதாரியாக வெளியேறினார். இரண்டாயிரமாம் ஆண்டு தொடக்கம் பாராளுமன்ற உறுப்பினராக இவர் பணியாற்றினார்.
சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான அரசாங்கத்தில் விவசாய அமைச்சராகவும் இவர் பணியாற்றினார்.
2017ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவராக இவர் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.