( யாழ். செய்தியாளர்)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் புதிய கட்சிகளைச் சேர்த்துக்கொண்டு செயற்படுவதற்காக நடந்துகொண்டிருந்த கூட்டத்திலிருந்து தமிழ் மக்கள் கூட்டணித் தலைவர் சிவி விக்கினேஸ்வரன் சற்று முன்னர் வெளிநடப்புச் செய்துள்ளார்.
தமிழ் தேசியக் கூடடமைப்பில் புதிய கட்சிகளைச் சேர்த்துக்கொண்டு எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இன்று மீண்டும் நடைபெற்றுவருகின்றது.
அந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்த விக்கினேஸ்வரன், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகளின், ஜனநாயகப் போராளிகள் கட்சியை கூட்டமைப்பில் சேர்ப்பதை கண்டித்ததுடன் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.
பின்னதாக, மிக அண்மையில் பதிவுசெய்யப்பட்ட தனது தமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியின் மான் சின்னத்திலேயே தேர்தலில் போட்டியிடவேண்டும் என்றும் அல்லது உருவாக்கப்படும் கூட்டமைப்புக்கு தன்னை பொதுச் செயலாளராக நியமிக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்ததாகவும் அதனை மற்றையவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்ததைத் தொடந்து கூட்டத்திலிருந்து வெளியேறியதாகவும் கூட்டம் நடைபெறும் இடத்திலிருந்து நமது செய்தியாளர் தெரிவித்தார்.
முன்னதாக,
கூட்டமைப்பில் தற்போது இடம்பெற்றுள்ள செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ரெலோ, த.சித்தார்த்தன் தலைமையிலான புளொட் ஆகிய கட்சிகளுடன் சேர்ந்து இயங்குவது தொடர்பாக க.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ் என்ற தமிழ் தேசிய மக்கள் கூட்டணி, என்.சிறிகாந்தா தலைமையிலான தமிழ் தேசிய கட்சி, யாழ் மாநகர முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன் தலைமையிலான அணி, ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன இந்தப் பேச்சில் கலந்துகொண்டிருந்தன.
விக்கினேஸ்வரன் இவ்வாறு வெளிநடப்பு செய்தபோது அவருடன் யாழ். மாநகர முன்னாள் முதல்வர் மணிவண்ணன், மற்றும் விக்கினேஸ்வரனின் கட்சியைச் சேர்ந்த பேராசிரியர் சிவநாதன் ஆகியோரும் வெளிநடப்பு செய்தனர்.
TL