அவுஸ்ரேலியாவைத் தலைமையகமாகக் கொண்டு இலங்கையில் பல்வேறு மாவட்டங்களிலும், தமது தன்னார்வ சேவைகளை பேதங்களின்றி அனைத்து இன மக்கள் மத்தியிலும், சேவைபுரிந்து வரும் தொண்டரமைப்பான வன்னிஹோப் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் கடந்த 8 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரைக்கும் கிழக்கு மாகாணத்தில் தங்கியிருந்து மாகாணத்தின் பல்வேறு இடங்களுக்கும் நேரில் சென்று மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் கேட்டறித்து கொண்டுள்ளதுடன், பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களையும், மேற்கொண்டு ஆரம்பித்து வைத்துள்ளனர்.
இதன்போது வன்னிஹோப் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஞ்சன் சிவஞானசுந்தரம், வைத்தியர் மாலதி வரன், றேணுகா சிவஞானசுந்தரம், வன்னிஹோப் நிறுவனத்தின் ஸ்தாபக உறுப்பினர் கந்தகுமார், நல்லையா பவுண்டேஸன் அமைப்பின் பணிப்பாளர் டொக்டர் பாலச்சந்திரன் நல்லையா, வன்னிஹோப் நிறுவனத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் பாரீஸ், அதன் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எஸ்.றேகா உள்ளிட்ட பலரும் இதன்போது இணைந்திருந்தனர்.
கிழக்கு மாகாணத்தின் திருகோணமலைக்கு விஜயம் செய்த இக்குழு அங்குள்ள பின்தங்கிய மக்களை நேரில் சென்று பார்வையிட்டதுடன், பல அபிவிருத்தித் திட்டங்களையும் ஆரம்பித்து வைத்துள்ளனர்.
பின்னர் அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்து தெரிவு செய்யப்பட்ட தமிழ், முஸ்லிம் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்துள்ளதுடன், உயர்தரத்தில் விஞ்ஞானம், மற்றும் பொறியில் துறையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கும் நிதி உதவிகளை வழங்கி வைத்துள்ளனர். பின்னர் அக்கரைப்பற்று சிவனருள் பவுண்டேஷனுக்கும் சென்று பார்வையிட்டதுடன், கல்முனை வடக்கு ஆதார வைத்தியவசாலைக்குச் சென்று வைத்தியசாலை பணிப்பாளர் உள்ளிட்ட குழுவினருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இதன்போது கிழக்கு மாகாணத்தின் மிகப்பெரிய சுகாதாரத் தேவையாகவுள்ள எம்.ஆர்.ஐ. இயந்திரம் ஒன்றை பெற்றுத்தருமாறு குறித்த வைத்தியசாலை நிருவாகம் வன்னிஹோப் நிறுவனத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.
பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்த அக்குழு, போரதீவுப்பற்று பிரதேச செயலகம் வெல்லாவெளியில் ஏற்பாடு செய்திருந்த மகளிர்தின நிகழ்வில் கலந்து கொண்டதுடன், பழுகாமம் விபுலாந்தா சிறுவர் இல்ல மாணவர்களைப் பார்வையிட்டதுடன், வன்னிஹோப் நிறுவனத்தின் அனுசரணையுடன் மாலையர்கட்டு கிராமத்தில் செயற்பட்டுவரும் இயற்கைஉர உற்பத்தி நிலையத்தையும் பார்வையிட்டனர். பின்னர் களுதாவளை இந்துமா மன்றத்தைச் சந்தித்து அவர்களது குறைநிறைகளைக் கேட்டறிந்து கொண்டதுடன், வந்தாறுமூலை எண்கோணேஸ்வரர் அறநெறிப் பாசாலைக்கும் விஜயம் செய்து அங்கு நடைபெற்ற நிகழ்வுகளில் பங்பேற்றதுடன் வாழைச்சேனைப் பகுதியில் உயர்தரப் பிரிவில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு நிதி உதவிகளையும் வழங்கி வைத்ததோடு, வன்னிஹோப் நிறுவனத்தின் அனுசரணையில் செயற்பட்டு வரும் அரசடித்தீவு சக்தி இல்லத்திற்கும் சென்று பார்வையிட்டுள்ளனர்.
மேலும் பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் சி.சிறிதரன், மற்றும் மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளரும், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளருமான அகிலா கனகசூரியம் அவர்களையும் சந்தித்து பாடசாலைகளுக்கு டிஜிட்டல் முறைமையூடாக கற்றலை இலகுபடுத்தும் செயற்பட்டங்கள் தொடர்பிலும், விஞ்ஞானம், கணிதம், ஆங்கலம், உள்ளிட்ட முக்கிய பாடங்களை கற்பிப்பதற்கு உந்து சக்தியளிப்பது தொடர்பிலும் கலந்துரையாடினர்.
தமது இவ்விஜயத்தின்போது கிழக்கு மாகாணம் மாத்திரமின்றி வடக்கு மற்றும் மலையகத்திற்கும் தாம் செல்வதாகவும், தமது நிறுவனம், தமிழ், சிங்களம், முஸ்லிம் என்ற பேதங்களின்றி மூவின மக்களுக்கும், நான்கு மதத்தவர்களுக்கும் எதுவித பாகுபாடுகளின்றி தன்னலம் கருதாது இலங்கையில் சேவை செய்து வருவதாக இதன்போது வன்னிஹோப் நிறுவனத்தின் பணிப்பாளர் குழு இதன்போது தெரிவித்தது.
AR