Home » தொடர்ந்தும் இலங்கையுடன் இணைந்திருப்போம் – கனடா உறுதி

தொடர்ந்தும் இலங்கையுடன் இணைந்திருப்போம் – கனடா உறுதி

Source
பொருளாதார மீட்சியை நோக்கிய இலங்கையின் பயணத்தில் நாம் தொடர்ந்தும் இலங்கையுடன் இணைந்திருப்போம் என இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனடா உயர்ஸ்தானிகர் எரிக் வொல்ஷ் தெரிவித்துள்ளார். கனடா கூட்டமைப்பின் 156ஆவது ஆண்டினை நினைவுகூரும் வகையில் இன்று கொண்டாடப்படும் கனடா தினத்துக்கான வாழ்த்துச் செய்தியிலேயே எரிக் வொல்ஷ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான கனடா உயர்ஸ்தானிகர் என்ற வகையில், இந்த நாடுகளில் வாழ்கிற, பணியாற்றுகிற, பயணம் செய்கிற அனைத்து கனேடியர்களுக்கும், கனடா நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி. கனேடிய கூட்டமைப்பின் 156ஆவது ஆண்டின் இன்றைய விசேட தினத்தில் உலகம் முழுவதும் உள்ள கனேடிய மக்களின் சிந்தனையானது பிரமிக்க வைக்கும் இயற்கைக் காட்சிகள், பல கலாசாரவாதம், வேற்றுமையில் ஒற்றுமை, அனைவரையும் உள்ளடக்கும் தன்மை, முன்னேற்றம் என்பவற்றின் கலங்கரை விளக்கமாக விளங்கும் ஒரு துடிப்பான சமூகத்தை கொண்டது என நன்கறியப்பட்ட தம் சொந்த நாட்டை நோக்கிச் செல்கிறது. கனேடிய மக்களின் பெரும் சாதனைகளையும், பங்களிப்புகளையும் இன்று நாம் கொண்டாடுவதுடன், உலகில் வாழும் பலரின் ஒரு விருப்பத்தெரிவாக கனடாவை மாற்றிய விழுமியங்கள் குறித்தும் சிந்திக்கிறோம். நான் கடந்த டிசம்பர் மாதம் இங்கு வந்ததிலிருந்து தமது மேலதிக கல்விக்காகவோ, கனடாவில் வசிக்கும் தமது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை சந்திப்பதற்காகவோ அல்லது அந்நாட்டில் தமது வசிப்பிடத்தை அமைத்துக்கொள்வதற்காகவோ கனடாவுக்குப் பயணித்த நாட்டின் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த இலங்கையர்களை சந்தித்துள்ளேன். எம் மக்களுக்கு இடையிலான பிணைப்புகள் மிகவும் ஆழமாக இருப்பதுடன், என் தாயகத்துடன் உறுதியான பிணைப்புக்களை கொண்டுள்ள பலரின் மத்தியில் எமது தேசிய தினத்தை கொண்டாடுவதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன். இலங்கையின் உறுதியான பங்காளராக பல தசாப்தங்களாக கனடா இருந்துள்ளது. கொழும்புக்கு முதலில் வந்திறங்கியபோது கனடா நட்புறவு வீதியினூடான எனது பயணமானது, எமது நீண்ட பங்காளித்துவத்துக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். அண்மையில் இரு முறை மாலைதீவுகளுக்கு விஜயம் செய்வதற்கான வாய்ப்பும் எனக்கு கிட்டியது. எமது வளர்ந்து வரும் சந்ததியினரின் ஒத்துழைப்பினை நேரடியாக காணக்கிடைத்ததில் மகிழ்ச்சி. குறிப்பாக, மாலைதீவுகளில் தீவுகளுக்கு இடையிலான இணைப்புக்கு கனடாவின் கடல் விமானங்களின் பங்களிப்பினை காண்பதில் நான் பெருமை கொள்கிறேன். முன்னெப்போதும் இல்லாத கடினமான ஒரு பொருளாதார நெருக்கடிக்கிடையே ஒரு முக்கிய தருணத்தில் இலங்கையில் எனது பதவிக்காலம் ஆரம்பிக்கப்பட்டதை நான் அறிவேன். இந்த நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவி செயற்பாடுகளுக்கு கனடா பங்களித்துள்ளதுடன், பொருளாதார மீட்சியை நோக்கிய இலங்கையின் பயணத்தில் நாம் தொடர்ந்தும் இலங்கையுடன் இணைந்திருப்போம். அதேவேளை, இலங்கையர்கள் இந்த நெருக்கடியிலிருந்து வெளியே வந்து, உள்ளடக்கமான, செழுமையான ஒரு சமூகத்தில் எதிர்காலத்தை எதிர்கொள்வதற்கும் தமது உண்மையான ஆற்றலை அடைவதற்கும் தயாராகும் வகையிலான உண்மையான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான சந்தர்ப்பமாக இந்த கணத்தை நாம் பார்க்கின்றோம். தமது கடந்த காலத்தின் கசப்பான உண்மைகளை எதிர்கொள்வதற்கும், நீண்டகால அநீதிகளை அடையாளப்படுத்துவதற்கும், கனடாவின் பூர்வீகக் குடிகளுடனான பணியை கனடா தொடர்கின்ற நிலையில், அர்த்தபூர்வமான, நீடிக்கும் தேசிய நல்லிணக்கத்தை நோக்கிய இலங்கையின் முயற்சிகளுக்கு எமது சொந்த அனுபவங்களில் இருந்து ஆதரவளிப்பதற்கும் நாம் தயாராக இருக்கின்றோம். முன்னோக்கிப் பார்க்கும்போது, நாம் கவனம் செலுத்தவேண்டிய புதிய மற்றும் நீண்ட கால முன்னுரிமைகள் எம்மிடம் உள்ளன. பிராந்தியத்தில் உள்ள மக்களுடன் எமது தொடர்புகளை வலுப்படுத்துவதற்கும், சர்வதேச ஈடுபாட்டை வழிநடத்துவதற்கும் இந்தோ – பசுபிக் மூலோபாயத்தை 2022இல் கனடா அறிமுகப்படுத்தியது. சமாதானம், நெகிழ்வுத்திறன் மற்றும் பாதுகாப்பினை முன்னிறுத்தலும், நிலையான மற்றும் பசுமையான எதிர்காலத்தை கட்டியெழுப்புவதும் எமது முன்னுரிமைகளில் உள்ளன. உலகின் தூய்மையான நீர் விநியோகத்தின் 20 சதவீதத்தினையும், உலகின் நீண்ட கடற்கரையை தன்னகத்தே கொண்டுள்ள நாடு என்ற வகையில், முக்கியமான கடல்சார் சூழல் தொகுதியை பாதுகாத்தல் உள்ளடங்கலாக சுற்றுச்சூழல் பொறுப்புணர்வின் உள்ளார்ந்த முக்கியத்துவத்தை கனடா புரிந்துவைத்துள்ளது. மாலைதீவுகளைச் சேர்ந்தவர்களாலும், இலங்கையர்களாலும் பகிரப்பட்ட முக்கிய கரிசனையாக இது, காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட பெரும் அச்சுறுத்தல்களால் மிகவும் அவசியமானதாக மாறியிருக்கிறது என்பதை நான் அறிவேன். நாம் எதிர்கொள்ளும் சவால்களை நாம் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் சிறப்பாக தீர்க்க முடியும் என்பதனால், இவ்விடயங்களிலும், ஏனைய விடயங்களிலும் ஒத்துழைப்பினையும், பரிமாற்றங்களையும் தொடர்வதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம். இந்த கனடா தினத்தில் இலங்கையிலும் மாலைதீவுகளிலும் உள்ள கனேடியர்கள் எமது பல்வகைமையான, துடிப்பான தேசத்தை பெருமையுடன் கொண்டாடுவதற்கான சந்தர்ப்பத்தை பெறுவீர்கள் என நான் நம்புகின்றேன். அனைவருக்கும் இனிய கனடா தின வாழ்த்துக்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image