வடக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டியதே ;தேசிய மக்கள் சக்தி தெரிவிப்பு!
வடக்கில் அரசியல் பிரச்சினை, மக்கள் பிரச்சினை என இரு பிரச்சினைகள் உள்ளன. அவை தீர்க்கப்படவேண்டும். மாகாணசபை முறைமை ஊடாகத் தமது அரசியல் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன என்று தமிழ் மக்கள் கருதும் பட்சத்தில் அந்த வியூகம் பாதுகாக்கப்படவேண்டும் – இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
கனடாவுக்குச் சென்றுள்ள அநுரகுமார திஸாநாயக்க அங்குள்ள இலங்கை மக்களுடன் சந்திப்புகளை நடத்திவருகின்றார். அந்தச் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டம், 13 பிளஸ் என்றெல்லாம் பேசப்படுகின்றது. மாகாணசபை முறைமை இதற்குத் தீர்வு அல்ல என்றே நாம் கருதுகின்றோம்.எனினும், மாகாணசபை முறைமை தற்போது அம்மக்களின் (தமிழ் மக்களின்) உரிமை. எனவே, அதை தற்போது இல்லாது செய்யமுடியாது.
அப்படியானால் தற்போது என்ன செய்ய வேண்டும்? மாகாணசபை முறைமை தமது அரசியல் உரிமையென அம்மக்கள் (தமிழ்மக்கள்) ஏற்கின்றனர் எனில். அதில் உள்ள பிரச்சினைகளைத் தீர்த்து அதை அம்மக்களின் உரிமையாக உறுதிப்படுத்த வேண்டும். நாம் அதைச்செய்வோம். இந்த முறைமை தீர்வா. இல்லையா என்பதை எதிர்காலம் தீர்மானிக்கும்.
தமது அரசியல் உரிமைகள் பாதுகாக்கப்படும் வியூகம் மாகாணசபை முறைமையென மக்கள் கருதினால் அதனை நாம் பாதுகாக்கவேண்டும். அரசியல் பிரச்சினை மற்றும் மக்கள் பிரச்சினைகள் என இரண்டுக்கும் தீர்வுகள் அவசியம். வடக்குக்குச் சென்றாலும், தெற்கில் இருந்தாலும் இதையே நாம் கூறிவருகின்றோம். வடக்கில் உள்ள தமிழ்த் தலைவர்களுடன் இது தொடர்பாகப் பேச்சு நடத்தத் தயார்”என்றும் அவர் அங்கு குரிப்பிட்டுள்ளார்.