யாழில் சுட்டுக்கொல்லப்பட்ட ஊடகவியலாளர் ரஜீவர்மனின் 17 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று!
யாழ்ப்பாணத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட ஊடகவியலாளர் செல்வராஜா ரஜீவர்மனின் 17 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
ஏ – 9 வீதி மூடப்பட்டு யாழ். குடாநாட்டில் இளைஞர்கள் வெள்ளை வானில் ஒட்டுக்குழுக்களாலும், அரச படைகளாலும் கடத்தப்பட்டும் சுட்டுக்கொல்லப்பட்டதுமான 2007 ஆம் ஆண்டு காலப் பகுதியிலேயே, அதியுயர் பாதுகாப்பு பிரதேசமாக இருந்த ஸ்ரான்லி வீதியும், இராசாவின் தோட்டப் பகுதியும் சந்திக்கும் இடத்தில் வைத்து ரஜீவர்மன் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அவர் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருக்கும்போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த ஆயுததாரிகள் அவரைச் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். அவர் கொல்லப்பட்ட இடத்துக்கு மிக அருகிலேயே இராணுவக் காவலரணும் அந்தக் காலத்தில் அமைந்திருந்தது.
புத்தூர், ஆவரங்கால் என்ற ஊரில் பிறந்த ரஜீவர்மன், புத்தூரிலேயே கல்வி கற்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் வெளிவாரி பட்டப்படிப்பு மாணவனாக இருந்தவர். சுட்டுக்கொல்லப்படும்போது அவருக்கு வயது 25.
ரஜீவர்மன் படுகொலை செய்யப்படும் காலப்பகுதியில் ‘உதயன்’ பத்திரிகையில் அலுவலகச் செய்தியாளராகப் பணியாற்றினார். யாழ். குடாநாட்டில் பத்திரிகைப் பணியென்பது அச்சுறுத்தலுக்குள்ளாகியிருந்த காலப்பகுதியில் பணியாற்றியவர். தினமும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் யாழ். சிவில் சமூக அமைப்புக்களின் காரியாலயங்களுக்கும் செய்தியாளராகச் சென்று செய்திகளை வெளிக்கொண்டு வருவதில் அவர் பெரும் பணியாற்றியவர்.
‘உதயன்’ பத்திரிகையில் பணியாற்றுவதற்கு முன்னர் ‘நமது ஈழநாடு’ பத்திரிகையிலும் ரஜீவர்மன் செய்தியாளராகப் பணியாற்றியிருந்தார். சட்டவிரோதமாக முன்னெடுக்கப்படும் கடத்தல்கள் தொடர்பில் புலனாய்வுச் செய்தியிடல்களை மேற்கொண்டிருந்தபோதே ரஜீவர்மன் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.