இரு நாடுகளுக்குமிடையில் பங்காளித்துவத்தை அதிகரிப்பது தொடர்பில் விசேட கவனம்
இலங்கையின் அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்காக, இந்தியாவுடன் சிறப்பான பங்காளித்துவத்துடன் தொடர எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
வலுசக்தித் துறை தொடர்பில் இரு நாடுகளுக்குமிடையிலான பங்காளித்துவத்தை அதிகரிப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அத்துடன், 30 வருடகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு புதிய அபிவிருத்தியை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
கொழும்பு ICT ரத்னதீப ஹோட்டலில் நடைபெற்ற 31ஆவது அகில இந்திய பங்காளித்துவக் கூட்டம் 2024 (AIPM 2024) இல் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
கடினமான கடந்த இரண்டு வருட காலப் பகுதியில் இந்தியா வழங்கிய 3.5 பில்லியன் டொலர் கடன் உதவி, எமக்கு பலமாக அமைந்தது. அந்தப் பணத்தை திருப்பித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். மேலும், பங்களாதேஷ் எங்களுக்கு வழங்கிய 200 மில்லியன் டொலர் கடனை நாங்கள் ஏற்கனவே செலுத்திவிட்டோம்.
சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர்கள் குழுவுடனான பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக முடித்துள்ளோம். எங்களின் உத்தியோகபூர்வ கடனாளிகள் குழு, அடுத்த வாரம் கூடவுள்ளது. எமக்கு கடன் வழங்கிய நாடுகளின் பிரதிநிதிகள், பாரிஸ் கிளப் மற்றும் இந்தியா ஆகிய தரப்பினரை சந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம். மேலும், சீனா மற்றும் சீனா எக்சிம் வங்கியுடனும் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளோம்.
அதன் பிறகு, எங்களுக்கு கடன் வழங்கிய நாடுகளுடனும், சீனாவின் எக்சிம் வங்கியுடனும் ஒப்பந்தம் செய்து கொள்ள தயாராக உள்ளோம். அதன்படி, வரும் புதன் கிழமை உத்தியோகபூர்வ கடனாளிகள் குழுவை (OCC) சந்திப்போம். அடுத்த வாரம் அல்லது அதற்குள், ஒரு நாடாக நாம் வங்குரோத்து நிலையிலிருந்து விடுபட்டு அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும் என்று எதிர்பார்க்கிறேன்.
ஆனால் இத்துடன் இந்தப் பிரச்சினை முடிந்துவிடாது. நாட்டில் மீண்டும் ஒரு பொருளாதார சரிவைத் தவிர்க்க வேண்டுமாயின், புதிய பொருளாதார பொறிமுறைக்கு நாம் துரிதமாக மாற வேண்டும். அது ஒரு போட்டிமிக்க, டிஜிட்டல் ஏற்றுமதி சார்ந்த பசுமைப் பொருளாதாரமாக இருக்க வேண்டும். அது நமக்குள்ள இரண்டாவது பொறுப்பு. எனவே, இந்தப் புதிய பொருளாதாரக் கொள்கையை சட்டப்பூர்வமாக்க புதிய அணுகுமுறைக்குச் செல்ல முடிவு செய்தோம்.
எதிர்கால அபிவிருத்தி இலக்கை அடைய, இலங்கை இந்தியாவுடன் சிறந்த ஒத்துழைப்புடன் முன்னோக்கிச் செல்ல எதிர்பார்க்கிறது. அதன்போது பல விசேட அபிவிருத்தித் திட்டங்களில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதில் முதலாவது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான மின்சார விநியோக வலையமைப்புகளை ஒன்றோடொன்று இணைப்பதாகும். அப்போது இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு நிலைபேறான வலுசக்தியைக் கடத்தும் திறன் உருவாகும். அதன் மூலம் புதிய வருமானத்தைப் பெற முடியும். மேலும், இந்த ஜூலை மாதம் சாம்பூரில் சூரிய சக்தி திட்டத்தை ஆரம்பிக்க முடியும் என எதிர்பார்க்கிறோம்.
அத்துடன், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் தரைமார்க்கமான தொடர்பை ஏற்படுத்துவதற்கான திட்டம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் புதிய முதலீட்டு வலயங்கள் திறக்கப்படும். எமது தொழிற் பயிற்சித் திட்டமும் விரிவுபடுத்தப்படுகிறது. எனவே, இந்தத் திட்டங்களில் இந்தியாவுடன் ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருகிறோம்.’’ என்று ஜனாதிபதி தெரிவித்தார்.