இஸ்ரேல் தாக்குதல்: ஹமாஸ் அமைப்பின் தலைவரின் இறுதிக் கிரியைகள் நாளை
இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியாவின் உடல் நல்லடக்கத்திற்கான கட்டாருக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.
வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்னர் அவரது உடல் கட்டாரில் அமைந்துள்ள லுஸெயில் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
இஸ்ரேலின் தாக்குதலினால் கொல்லப்பட்ட ஹமாஸ் அமைப்பின் தலைவருக்கான இறுதித் தொழுகையை ஈரான் ஆன்மீகத் தலைவர் ஆயத்துல்லா அலி காமெயினி நடத்தியதாக அல்ஜஸீரா இணையதளம் அறிவித்துள்ளது.
இதேவேளை பல்வேறு நாடுகளும் இவரது படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் இஸ்மாயில் ஹனியாவை மிகச் சிறந்த மனிதர் என்றும் வர்ணித்துள்ளார்.
தார்மீக ரீதியாக அவர் தமது மக்களின் பக்கம் நின்றுஇ செயற்பட்டதாகவும் மலேசியப் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இஸ்மாயில் ஹனியாவின் மரணம் பற்றி மலேசியப் பிரதமர் வெளியிட்டிருந்த செய்தியை பேஸ்புக் சமூக வலைதளம் நீக்கியமை தொடர்பில் மலேசிய அரசாங்கம் மெட்டா நிறுவனத்திடம் விளக்கம் கோரியுள்ளது.
அன்வர் இப்ராஹிம் ஹனியாவின் படுகொலை குறித்து வெளியிட்ட செய்தி நீக்கப்பட்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாகவும் மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.