மத்திய கிழக்கிற்கான ஆயுதங்களை அனுப்பும் நடவடிக்கையை அமெரிக்க துரிதப்படுத்தியுள்ளது.
அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஜெற் விமானங்கள், போர் கப்பல்கள் என்பனவற்றை அனுப்ப ஆரம்பித்திருக்கின்றது. இஸ்ரேலின் இலக்குகள் மீது ஈரான் எந்தவேளையிலும் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் அதிகரித்து வரும் வேளையில் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கின்றது.
ஈரான் சென்றிருந்த ஹமாஸ் அமைப்பின் சிரேஷ்ட தலைவர் இஸ்மயில் ஹனியா, தஹ்ரான் நகரில் வைத்து படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இஸ்ரேலின் இலக்குகள் மீது ஈரான் எந்தவேளையிலும் தாக்குதல் நடத்தலாம் என்று மேற்குலக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
ஈரானும் அதன் உதவியோடு இயங்கும் ஆயுதக் குழுக்களும் எந்தவேளையிலும் இஸ்ரேலைத் தாக்கலாம் என்றும் அதில் இருந்து இஸ்ரேலைப் பாதுகாப்பதற்காகவே இந்த ஆயுதங்கள் அனுப்பப்படுவதாகவும் பென்டகன் அறிவித்திருக்கின்றது.
இஸ்ரேலின் எல்லைப் பகுதியில் எவுகணைப் பாதுகாப்புக் கட்டமைப்புக்களை கூடுதலாக நிலைநிறுத்தவும் அமெரிக்கா எதிர்பார்த்திருக்கின்றது.
இதனிடையே, அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹரிஸ் சம்பிரதாயபூர்வமாக முன்மொழியப்பட்டிருக்கின்றார். கட்சியின் பேராளர் மாநாட்டின்போது இந்த முன்மொழிவு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஆபிரிக்க மற்றும் ஆசிய பூர்வீகம் கொண்ட முதலாவது பெண்ணாக இவர் கருதப்படுகின்றது.
எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் இவர் வெற்றிபெறுவாராயின் அமெரிக்காவில் தெரிவு செய்யப்படும் முதலாவது பெண் ஜனாதிபதியாக அவர் வரலாற்றில் இணைந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.