சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்பு: வட்டி வீதத்தை திருத்துவது தொடர்பான யோசனை ஜனாதிபதியிடம்
சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புகளுக்கு வழங்கப்படும் வட்டி வீதத்தை திருத்துவது தொடர்பான தீர்வு யோசனைகள் அடங்கிய அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக, நிதி ராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய ருவென்வெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றைத் தொடர்ந்து செய்தியாளர் மத்தியில் கருத்து வெளியிட்ட போது இந்தத் தகவலை குறிப்பிட்டார்.
இலங்கையில் வாழும் சிரேஷ்ட பிரஜைகளில் பெரும்பாலானவர்கள் தாம் ஓய்வு பெறும் போது கிடைக்கக்கூடிய பணிக்கொடை கொடுப்பனவை வங்கியில் வைப்பில் இட்டோ, ஏனைய வைப்புக்கள் மூலமோ கிடைக்கும் நிரந்தர வட்டியின் மூலம் வருமானம் ஈட்டி வருகிறார்கள்.
வங்கிக் கடன் பெற்றவர்கள் வட்டி வீதங்களை குறைக்குமாறு கோரிக்கை விடுத்ததாகவும், அதற்கமைய வைப்புகளுக்காக செலுத்தப்படும் வட்டி வீதங்களும் தானாகவே குறைந்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்தப் பிரச்சனையை தீர்ப்பதற்கு ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய திறைசேரி அறிக்கை ஒன்றை தயாரித்திருந்ததாக அவர் கூறினார்.