அடுத்த 48 மணித்தியாலங்களில் கிங் மற்றும் களு கங்கைகளின் மேல்பகுதிகளில் மழை
கடும் மழையினால் ஆயிரத்து 119 குடும்பங்களைச் சேர்ந்த மூவாயிரத்து 432 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
76 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. களுத்துறை மாவட்டத்தின் மதுராவல, மில்லனிய, புலத்சிங்கள மற்றும் பாலிந்தனுவர பிரதேச செயலகப் பிரிவுகளில் பல வீதிகள் தொடர்ந்தும் நீரில் மூழ்கியுள்ளன.
களுத்துறை குகுலே கங்கை நீர்த்தேக்கத்தின் வான்கதவு ஒன்றும் குருநாகல் தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.
மழை காரணமாக பல ஆறுகளின் நீர்மட்டம் துரிதமாக அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் பொறியியலாளர் எஸ்.பி.சி.சுகீஸ்வர தெரிவித்துள்ளார். களு மற்றும் ஜிங் கங்கைகளின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. களுகங்கையின் புட்டுபவுல மற்றும் மகுர பகுதிகள் தற்போது அபாய மட்டத்தை எட்டியுள்ளது. களுகங்கையின் கிளை ஆறான குடாகங்கையை அண்மித்த மில்லகந்த பிரதேசத்தில் சிறியளவன வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஜிங் கங்கையின் தவலம பிரதேசம் அபாய நிலையில் உள்ளதாக பணிப்பாளர் தெரிவித்தார்.
அடுத்த 48 மணித்தியாலங்களில் கிங் மற்றும் களு கங்கைகளின் மேல்பகுதிகளில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. களுத்துறை மாவட்டம் மழையினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் ஆறு மாவட்டங்களில் உள்ள 32 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை அறிவித்தல் தொடர்ந்தும் அமுலில் உள்ளது. அதன்படி, கொழும்பு, காலி, களுத்துறை. கேகாலை. நுவரெலியா, இரத்தினபுரி மாவட்டங்களுக்கான இந்த அறிவித்தல் இன்று மாலை 4 மணிவரை அமுலில் இருக்கும்.