ஜனாஸாக்கள் தகனம் செய்யப்பட்டமைக்கு இழப்பீடு – ரணில்
பசியோடு இருந்த மக்களின் துன்பத்தைக் கண்டு, நாட்டைப் பொறுப்பேற்று அந்த மக்களின் பசியைப் போக்கியதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
நாட்டைப் பொறுப்பேற்க எவரும் முன்வராத பட்சத்தில் தான் நாட்டைப் பொறுப்பேற்ற பின்னர் வீடுகளில் முடங்கியிருந்த மக்களும், இளைஞர்களும் வெளிவந்து நடக்க ஆரம்பித்ததாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இரண்டு வருடங்கள் கடந்துள்ளதால் மக்கள் அந்தத் துன்பங்களை மறந்திருக்கக் கூடும் என்றும், எனினும், அவ்வாறானதொரு நிலைக்கு மீண்டும் செல்லாதிருக்க சிந்தித்து வாக்களிக்குமாறும் ஜனாதிபதி தெரிவித்தார்.
தேசிய காங்கிரஸ் மாநாடு நேற்று (23) பிற்பகல் அக்கறைப்பற்று நீர்ப்பூங்காவில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
“இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பிரகடனம் குறித்து கவனம் செலுத்துவேன். எனக்கு ஆதரவு தந்தமைக்கு நன்றி. பசிக்கு இனமோ மதமோ கிடையாது. அதேபோல் கட்சியும் இல்லை. இப்படியான தருணத்தில் நாட்டை பற்றியே சிந்திக்க வேண்டும். நான் நாட்டை ஏற்ற போது, கேஸ், அரிசி, உரம் போன்ற அத்தியாவசிய பொருட்கள் இருக்கவில்லை. பெரும்போகத்திற்கும் சிறுபோகத்திற்கும் உரமின்றி விவசாயிகள் வீதியில் இறங்கினர்.
மக்களின் பசியை போக்க வேண்டியிருந்தது. நான் ஜனாதிபதியான பின்னரான எல்லா போகத்திலும் அறுவடை கிடைத்தது. 2025 ஆம் ஆண்டு சிறுபோகத்திலும் நல்ல அறுவடை கிடைக்குமென நம்புகிறோம். கேஸ், எரிபொருள் தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்தோம். மக்கள் சுமூகமாக வாழ ஆரம்பித்தனர். மக்களால் சுதந்திரமாக நடமாட முடிந்தது. வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்த மக்களும் இளையோரும் எழுந்து நடக்க ஆரம்பித்தனர்.
மக்கள் சில நேரம் 2 வருட துன்பங்களை மறந்திருப்பர். அன்று எவரும் நாட்டை ஏற்க முன்வரவில்லை. அப்போது நான் எதிர்கட்சித் தலைவராகவும் இருக்கவில்லை. அப்போது எனது கட்சியிலும் நான் மட்டுமே எம்.பியாக இருந்தேன். மக்கள் பசி எனக்கு புரிந்தது. இளையோரின் எதிர்பார்ப்புக்களும் புரிந்தது. அதனால் நாட்டையும் நாட்டின் முன்பிருந்த சவால்களையும் துணிந்து ஏற்றுக்கொண்டேன். முன்னாள் பிரதமர் என்ற வகையில் அது எனது கடமை என்று கருதினேன்.
நான் ஏற்ற நாட்டை முன்னோக்கி கொண்டுச் சென்றேன். அப்போது நாட்டை ஏற்க வராதவர்கள் இப்போது என்னை துரோகி என்கின்றனர். அப்போது சஜித் எங்கிருந்தார் .அன்று ஓட்டத்தை ஆரம்பித்தவர் பெரிஸ் ஒலிம்பிக் வரையில் ஓடி முடித்தார். பிரச்சினையை தீர்க்கும் வலுவற்றவர்கள் இப்போது என்னால் முடியாது என்று சொல்வது வேடிக்கையானது. அநுரவை பற்றி பேசுவதில் பிரயோசனம் இல்லை.
எனவே, நாம் அனைவரும் ஒன்றுபட்டு நாட்டைக் கட்டியெழுப்புவோம். அன்றைய நிலையை விட இன்று நல்ல நிலைமை உருவாகியுள்ளது. பொருட்களின் விலையை குறைக்க வேண்டியுள்ளது. ரூபாயை பலப்படுத்தினால் அது தானாகவே நடக்கும்.
2023 ஆம் ஆண்டு மொத்த தேசிய உற்பத்தியை 84 டொலர்களாக அதிகரிக்க முடிந்தது. பணவீக்கம் 10 சதவீதமாக குறைந்தது. 300 ரூபா வரையில் டொலரின் பெறுமதி குறைந்தது. பொருட்களின் விலை குறைந்தது. உற்பத்தியை 89 பில்லியனாக அதிகரிக்க வேண்டும். 95 பில்லியனாக்குவதே இலக்காகும். அதனால் ரூபா வலுவடைந்து, நிவாரணமும் கிடைக்கும். அது தவிர்ந்த வேறு வழிகள் எமக்கு இல்லை.
இதன்போது ஐ.எம்.எப் எமக்கு உதவியது. அவர்களின் வேலைத் திட்டத்தின் கீழ் இலக்கை நோக்கிய பயணம் இருந்தது. பணம் அச்சிடவோ, கடன் பெறவோ முடியாத நிலை இருந்தது. வரியை அதிகரித்து வருமானத்தை அதிகரித்தோம். அதனை விருப்பத்தோடு செய்யவில்லை. அதனால் பொருளாதாரம் வலுவடையும் என்பதை முன்பே அறிந்திருந்தேன். ரூபாயின் பெறுமதி அதிகரிக்கும் என்பதையும் அறிந்திருந்தேன். அது சாத்தியமானது.
இந்த ஒப்பந்தங்களை சஜித் மீறினால் என்னவாகும்? திருத்தம் செய்ய வேண்டும் என்கிறார்கள். அதனால் எமக்கான உதவிகள் கிடைக்காமல் போகும். டொலரின் பெறுமதி 400 வரையில் அதிகரிக்கும். சிலவேளை 450 ஆகவும் அதிகரிக்கலாம். பணம் இன்றி எரிபொருளும் இன்றி தேங்காய் எண்ணெய் மூலம் வாகனம் செலுத்த வேண்டியிருக்கும். அப்படியொரு நிலை வேண்டுமா?
இங்கிருந்து முன்னோக்கி செல்வதா பின்னோக்கி செல்வதா? நாட்டைக் கட்டியெழுப்ப இன்னும் மூன்று வருடங்கள் தேவைப்படும் இது உங்களது எதிர்காலம். அதைப் பற்றி சிந்தித்து வாக்களியுங்கள். பழைய அரசியலை விட்டுவிடுங்கள். ஒன்றுபட்டு இந்த பிரதேசத்தை முன்னேற்றுவோம். விவசாயம் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட துறைகளை முன்னேற்றுவோம்.
அனைத்து இன மக்களையும் ஒரே வகையில் பார்க்கிறேன். முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் தகனம் செய்யப்பட்டதால் அவர்கள் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டனர். அந்த தவறை எனது அரசாங்கம் செய்யவில்லை. இருப்பினும், இலங்கை அரசாங்கம் ஒன்றே அந்த தவறை செய்தது என்ற வகையில் எனது அமைச்சரவையும் நானும் முஸ்லிம் மக்களிடம் மன்னிப்பு கோரினோம். அவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் தீர்மானித்தோம். விருப்பமானவர்கள் தகனம் செய்யவும், நல்லடக்கம் செய்யவும், மருத்துவ கல்லூரிகளுக்கு உடல்களை வழங்கவும் தீர்மானிக்கும் சுதந்திரத்தை வழங்குவதற்கான சட்டமொன்றைத் தயாரிக்குமாறு அமைச்சர் அலி சப்ரியிடம் அறிவுறுத்தியுள்ளேன்.
அதனால் எதிர்காலத்தில் பிரச்சினைகள் வராது. ஹக்கீம், ரிஷாட் போன்றவர்கள் ஏன் அதனை செய்யவில்லை. அனைவரையும் ஒன்றுபடுத்தி அரசாங்கமாக இந்த முடிவை எடுத்தோம். முஸ்லிம் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பேன். தேசிய காங்கிரஸூம் அதனைச் செய்யும். அச்சம் கொள்ள வேண்டாம். எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து சிலிண்டர் சின்னத்துக்கு வாக்களியுங்கள். இல்லாவிட்டால் சிலிண்டர் கூட இல்லாத வாழ்க்கைக்கு தயாராகுங்கள்.” என்று தெரிவித்தார்.