சாதாரண மற்றும் உயர்தர பரீட்சைகளில் சித்தியடைந்தவர்களுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டம்
ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வு கொழும்பில் நடைபெற்றது. ரணிலுடன் நாட்டை வெற்றி கொள்ளும் ஐந்தாண்டுத் திட்டம் எனும் தொனிப்பொருளில் இந்த விஞ்ஞாபனம் அமைந்துள்ளது.
வாழ்க்கைச் சுமையினை குறைத்தல், தொழில் வழங்கல், வரி நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு யோசனைகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஐந்து பிரதான இலக்குகளின்படி இந்த திட்டம் செயற்படுத்தப்படும்.
நெற்செய்கைக்கான உரம் மற்றும் ஏனைய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு 25 ஆயிரம் ரூபாவை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும். போகத்திற்கு போகம் நெல்லுக்கு நியாயமான விலை நிர்ணயிக்கப்படும் எனவும் தேர்தல் விஞ்ஞானபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உற்பத்தித் பொருளாதாரத்தை வளப்படுத்துவதற்காக தற்போதுள்ள தடைகள் நீக்கப்படும். முதலீட்டை மேம்படுத்துவதற்காக புதிய பொருளாதார ஆணைக்குழு அமைக்கப்படும். சர்வதேச வர்த்தக விவகாரங்களை கையாள்வதற்கு சர்வதேச வர்த்தகம் தொடர்பான அலுவலகம் ஸ்தாபிக்கப்படும் என்றும் விஞ்ஞானபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகள் நவீன யுகத்திற்கு ஏற்ற வகையில் நவீனமயப்படுத்தப்படும். யாழ்பாணத்திற்கான கால்வாய்த் திட்டம் 2027ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்படும்.
பூநகரி நகரம் எரிசக்தி பொருளாதார மத்திய நிலையமாக மாற்றப்படும். யாழ்ப்பாணம், தொழில்நுட்ப கல்வி மத்திய நிலையமாக அபிவிருத்தி செய்யப்படும். மின்சாரம் மற்றும் எரிபொருளின் விலையானது, அதன் செலவுகளை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படும். வரி முறைமையில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 15 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படும். அந்த குடும்பங்களிலுள்ள சிறுநீரக நோயாளர்கள், மாற்றுவலுவுடையோர் மற்றும் முதியோருக்கு வேறு கொடுப்பனவுகளும் வழங்கப்படும். சகல பிரஜைகளுக்கும் காணி மற்றும் வீட்டு உரிமை கிடைக்கும் என்றும் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பு நகரில் அரசாங்கத்திற்கு சொந்தமான வீடுகளில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு அந்த வீட்டு உரிமை வழங்கப்படும். இந்த செயற்றிட்டம் நான்கு வருடங்களுக்கு முன்னெடுக்கப்படும் என்று விஞ்ஞானபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்ட மக்களுக்கு புதிய கிராமங்கள் ஏற்படுத்தப்படும். அத்துடன் லயன் அறைகளில் வாழும் மக்களுக்கு காணி வழங்கப்படும். 2025ஆம் ஆண்டுக்குள் ஒரு இலட்சம் தொழில் வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வி பொதுத்தரதார பத்திர சாதாரண தரம் மற்றும் உயர்தர பரீட்சைகளில் சித்தியடைந்த இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வழங்குவதற்கு புதிய வேலைத்திட்டம் அடுத்த வருடத்தில் ஆரம்பிக்கப்படும். இந்த இளைஞர் யுவதிகளுக்கு திறன்விருத்தி பயிற்சி வழங்கப்படுவதுடன் அந்த காலப்பகுதியில் 35 ஆயிரம் ரூபா கொடுப்பனவும் வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்ட்டுள்ளது