தமிழ் மக்களின் வாக்குகளை உபயோகமான முறையில் பயன்படுத்த வேண்டும் – அஜித் தோவல்
ஜனாதிபதி தேர்தலில் அனைவரும் ஒற்றுமையாக ஒருமித்து நின்று, தமிழ் மக்களின் வாக்குகளை உபயோகமான முறையில் பயன்படுத்துவதே சிறந்தது என இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற சந்திப்பின்போது தமிழ்ப் பொதுவேட்பாளர் விவகாரம், தேர்தல் புறக்கணிப்பு கோஷம் உள்ளிட்ட பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.
இதன்போது கருத்து வெளியிட்ட இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்,
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் எவ்வாறு செயற்படவேண்டும் என்பது குறித்து தான் எதனையும் கூறப்போவதில்லை எனவும், இருப்பினும் அனைவரும் ஒற்றுமையாக ஒருமித்து நின்று, தமிழ் மக்களின் வாக்குகளை உபயோகமான முறையில் பயன்படுத்துவதே சிறந்த தீர்மானமாக அமையும் என்று தான் கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை சென்ற இவர் இலங்கை பிரதமர் தினேஸ் குணவர்தனவையும் சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பில் பல்வேறு விடயங்கள் பேசப்பட்டுள்ளன. இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறுகையில், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த அபரிமிதமான சாத்தியங்கள் இருப்பதாகவும், இருதரப்பு உறவுகளில் பூரணத்துவம் என்ற அம்சத்தை கருத்தில் கொண்டு இது பரஸ்பர நன்மைக்கானது என்றும் கூறினார்.
கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தமை குறிப்பிடதக்கது.