பொருளாதார பிரச்சினைகளுக்கு அடுத்த 5 வருடங்களுக்குள் தீர்வு
நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு அடுத்த ஐந்து வருடங்களுக்குள் தீர்வு காணப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்னும் 20 வருடங்களில் தற்போதைய நிலையை விட சிறந்த நாட்டில் வாழ முடியும் என்று இளைஞர்களிடம் வலியுறுத்தினார்.
சஜித் பிரேமதாச மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோரிடம் நாட்டை கட்டியெழுப்ப எந்த திட்டமும் இல்லை. அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடைந்தால் நாட்டின் எதிர்காலம் தொடர்பில் எவராலும் நம்பிக்கை வைக்க முடியாது என ஜனாதிபதி தெரிவித்தார்.
அம்பாறை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். கடந்த இரண்டு வருடங்களில் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுத்து அனைவரும் வாழக்கூடிய நாட்டை உருவாக்க முடிந்தது. சிறுவர்கள் மற்றும் நாட்டின் எதிர்காலத்திற்காக இத்திட்டம் பாதுகாக்கப்பட்டு முன்னோக்கி கொண்டு செல்லப்பட வேண்டும்.
நாட்டின் அனைத்து மக்களும் தற்போது இயல்பு வாழ்க்கை வாழ்ந்து வருவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, பொருளாதார நெருக்கடி காரணமாக ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்து பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதனால் மக்களின் வருமானம் அதிகரிக்கவில்லை. எனவே, மக்கள் இன்னும் வாழ்க்கைச் சுமையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என ஜனாதிபதி தெரிவித்தார்.
இங்கு உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், ஜனாதிபதியின் வெற்றியில் பங்குகொள்ள கிழக்கு மக்களும் தயாராக உள்ளனர் என குறிப்பிட்டார்.
இதனிடையே, கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே கலந்துகொண்டார். தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீக்குவது தொடர்பில் இந்த தருணத்தில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.
இவ்வாறான இக்கட்டான நேரத்தில் பொருளாதார அமைப்பு சீர்குலைந்தால், நாடு மீண்டும் வீழ்ச்சியடையும் என அவர் குறிப்பிட்டார்.