தேர்தல் சட்டம் தேசிய பாதுகாப்பிற்கு இடையூறு விளைவித்தால் நடவடிக்கை
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் வாக்காளர்களைத் தெளிவூட்டும் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வாக்களிக்கும் முறை, வாக்களிப்பதற்குச் செல்லும்போது எடுத்துச் செல்லவேண்டியவை, அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கான அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை என்பன தொடர்பில் சுவரொட்டிகள் மூலம் தெளிவுபடுத்தப்படும்.
வாக்களிப்பு நிலையங்களில் செய்யக்கூடாத விடயங்கள் பற்றியும் தெளிவுபடுத்தப்படும்.இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் இரண்டு தினங்களில் நடைமுறைப்படுத்தப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
தேர்தல் பணி மற்றும் பாதுகாப்புக் கடமையில் எதிர்வரும் 20ஆம் திகதியில் இருந்து 22ஆம் திகதி வரை 63 ஆயிரம் பொலிசாரை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.
பொலிசாருக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக படைப்பிரிவைச் சேர்ந்த 3 ஆயிரம் பேரும், சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 12 ஆயிரம் பேரும,;; விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த 2 ஆயிரத்து 500 பேரும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
தேர்தல் சட்டத்தை மீறுபவர் மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயற்படுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு பொலிசாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதேவேளை, தேர்தல் பிரசார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளன. பிரதான கட்சிகளின் இறுதி பிரசாரக் கூட்டங்கள் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் காலப்பகுதியில் ஏற்படக்கூடிய வானிலை பற்றி கவனம் செலுத்தியிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அனர்த்த பாதிப்புக்கள் இன்றி தேர்தலை நடத்துவதற்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையமும் தேர்தல்கள் ஆணைக்குழுவும் இணைந்து விசேட வேலைத்திட்டத்தை திட்டமிட்டுள்ளன.
ஜனாதிபதித் தேர்தல் முடிவு பற்றிய விசேட ஒலிபரப்பை தேசிய வானொலி எதிர்வரும் 21ஆம் திகதி இரவு 10.30ற்கு ஆரம்பிக்கவுள்ளது.