Home » ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் உள்ளேன் – ஜனாதிபதி

ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் உள்ளேன் – ஜனாதிபதி

Source

மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கு தான் அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்காக நேற்று இரவு ஆற்றிய விசேட உரையிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

பல தசாப்தங்களாக நாம் எழுப்பிய குரலுக்கு மெது மெதுவாக ஆனால் சீராக செவிசாய்த்து, நாங்கள் முன்வைத்த வேலைத்திட்டத்திற்கு உயிர்மூச்சாக செயற்பட்ட அனைவருக்கும் எங்களது கௌரவத்தைத் தெரிவிக்கிறோம்.

எங்களுக்கு வாக்கு அளிக்காதவர்கள் கூட எம்முடன் இணைந்து செயற்பட்டாலே முழு வெற்றியாக அர்த்தமுள்ளதாகும்.

எனவே, இந்த வெற்றியின் உரிமையை நம் நாட்டின் அனைத்து மக்களுடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நமது அரசியல் இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து, புதிய பரிசோதனைக்கு அஞ்சாமல், எமது அரசியல் இயக்கத்திற்கு நமது நாட்டின் ஆட்சி அதிகாரத்தை வழங்கும் அளவிற்கு பெரும் உறுதியுடன் இருந்த அனைத்து மக்களுக்கும் இந்த நாட்டைக் கட்டியெழுப்பும் பணிக்கு தோள் கொடுப்பதற்கான பலம் இருக்கும் என நாங்கள் நம்புகிறோம்.

இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கான பங்கை கூட்டுசெயற்பாடாக நிறைவேற்றும் திறன் எமக்கு உள்ளது. அதற்கான மிகத் திறமையான குழு எங்களிடம் உள்ளது.

நம் அனைவருக்கும் அது குறித்த முழுமையான உறுதிப்பாடு உள்ளது. நாம் எதிர்பார்க்கும் மாற்றத்தை ஏற்படுத்த எத்தகைய மாற்றத்தையும் மேற்கொள்வதற்கு முன்னதாக பொருளாதாரத்தை ஸ்திரமான நிலைக்கு உயர்த்துவது அவசியம் என நாம் நம்புகிறோம்.

அதற்காக நீண்டகால மத்திய கால திட்டங்களைத் தயாரிப்பதற்கு முன்னர், பின்பற்ற வேண்டிய துரித பொருளாதார செயற்பாடுகளின் ஊடாக குறுங்கால ஸ்தீரநிலையை ஏற்படுத்த நாம் நடவடிக்கை எடுப்போம்.

சர்வதேச நாணய நிதியம்:

சர்வதேச நாணய நிதியத்துடன் துரிதமாக பேச்சுவார்த்தை ஆரம்பித்து நீடிக்கப்பட்ட கடன் வசதியுடன் தொடர்புள்ள விடயங்களை தொடர்ந்து முன்னெடுக்க நாம் எதிர்பார்க்கிறோம்.

கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக, சம்பந்தப்பட்ட கடன் தரப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அது தொடர்பான பணிகளை விரைவில் நிறைவு செய்து, உரிய கடன் நிவாரணத்தைப் பெறுவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுப்போம். அதற்கு இந்த நாட்டு மக்களைப் போலவே சர்வதேச சமூகத்தினதும் ஆதரவையும் பெற முடியும் என நம்புகிறோம்.

அந்த ஒத்துழைப்பின் மூலம் இந்த கூட்டு முயற்சியில் வெற்றி பெற முடியும் என எதிர்பார்க்கிறோம்.
எமக்கு அதிகாரத்தை கையளிக்கையில் ‘மாற்றம்’ ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணக் கருவே மக்களிடத்தில் ஆழமாக பதிந்திருந்தது. மாற்றம் என எமது நாட்டு மக்கள் கருதுவது அரசியல் முறைமையில் காணப்படும் அனைத்துவிதமான மோசமான செயல்களை மாற்றுவதேயாகும்.

நாட்டில் நடைபெற்ற அனைத்துவிதமான தேர்தல்களையும் நோக்கினால், தேர்தலுக்குப் பின்னரான எந்த வன்முறைச் சம்பவமும் நடைபெறாத ஒரேயொரு தேர்தலாக நாம் வெற்றியீட்டிய ஜனாதிபதித் தேர்தலை வரலாற்றில் பதிய முடிந்துள்ளது.

எந்த இனத்தவராக இருந்தாலும் “நாம் இலங்கைப் பிரஜைகள்” என்று பெருமையுடன் வாழக்கூடிய நடைமுறைச்சாத்தியமான ஒரு நாடு உருவாக்கப்படும். அதற்காக அரசியலமைப்பு ரீதியான, பொருளாதார. மறுசீரமைப்புகளை மேற்கொள்ள ஒரு போதும் நாம் பின்வாங்க மாட்டோம்.

பொதுப் பணிக்கு இடையூறு ஏற்படாத மற்றும் பிரஜைகள் தொடர்பில் பாதகமான அழுத்தங்கள் ஏற்படாத வகையில், எதிர்பார்த்த மாற்றங்கள் படிப்படியாக மேற்கொண்டு நாம் முன்னோக்கிச் செல்வோம்.
சட்டத்தை மதிக்கும் நாட்டை உருவாக்கவும், ஒழுக்கமான சமுதாயத்தை உருவாக்கவும் நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம்.

அனைத்து பிரஜைகளினதும் சமூக பாதுகாப்பை உறுதி செய்வோம். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற எண்ணக்கருவை மீள உயிர்ப்பிப்போம். எமது நாட்டை கட்டியெழுப்புகையில் அரச சேவைக்கு பாரிய பங்கு இருக்கிறது என்பதை நம்புகிறோம்.

பொது மக்களை கண்ணியமாக நடத்தும் அரசாங்கத்தின் இலக்குகளை நோக்கிச் செல்லும் அரச சேவையை உருவாக்குவோம். இந்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே எமது எதிர்பார்ப்பாகும்.

மக்கள் மீது ஏற்றப்பட்டுள்ள வாழ்க்கைச் சுமையை குறைப்பதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம். அனைத்து பிள்ளைகளுக்கும் சிறந்த கல்வியை வழங்கவும், அடுத்த தலைமுறையை பாதுகாக்கவும் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம். அறிவு, திறன், மனநிலை என்பவற்றை மேம்படுத்தி இளைஞர் சமூகத்திற்கு நம்பிக்கை ஏற்படக் கூடிய எதிர்காலத்தை உருவாக்குவோம்.

நமது நாட்டின் சனத்தொகையில் ஐம்பத்திரண்டு வீதத்தைத் தாண்டிய பெண்கள் சமூகம், இந்நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூகச் செயல்பாட்டிற்கு பெரும் பங்களிப்பைச் செய்யும் குழுவாகும். பெண்கள் பிரதிநிதித்துவம் தொடர்பாக அனைவரும் ஒன்றிணைந்து எடுக்கக்கூடிய நடவடிக்கைகளுக்கு நாம் செல்வோம்.

விசேட தேவையுடைய பிரஜைகளுக்கு:

விசேட தேவையுடையவர்களுக்கு பலமான சமூக பாதுகாப்பு கட்டமைப்பொன்றை நாம் திட்டமிட்டுள்ளதோடு அதன் குறுங்கால நடவடிக்கையை விரைவாக ஆரம்பிப்போம். நாம் செல்லும் பயணத்தில் சமூக கட்டமைப்பின் எந்தவொரு பகுதியையும் கைவிடப்போவதில்லை என்பதற்கு நாம் பொறுப்பு கூறுகிறோம். ஒவ்வொருவரினதும் தனித்துவத்திற்கு மதிப்பளித்து அவற்றை நாட்டின் முன்னேற்றத்துக்காக சாதகமான முறையில் பயன்படுத்திக்கொள்ள எமது பங்களிப்பை வழங்குவோம்.

குடிமக்களின் சமூக பாதுகாப்பு:

மக்கள் இறைமைக்கு மதிப்பளிக்கும் அதேநேரம், அவர்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்போம். இந்த நாட்டை கட்டியெழுப்வுதற்காக காத்திரமாகவும் நேர்மையாகவும் இணையும் அனைவருக்கும் எமது கதவுகள் திறந்துள்ளன. மக்களின் ஆணைக்கு அமைவான பாராளுமன்றம் ஒன்று அவசியப்படுகிறது.

சந்தர்ப்பவாதம், அதிகாரமோகம், சர்வாதிகாரம் மற்றும் இனவாதம் காரணமாக எமது நாட்டை மேலும் உயர்த்தி வைக்க எம்மால் முடியாமல் உள்ளது.

நாம் அனைவரும் ஒன்றிணைந்து பல்வகைத்தன்மையை ஏற்றுக்கொள்ளும் செழிப்பான நாட்டை கட்டியெழுப்புவோம் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image