எரிபொருள் விநியோக கட்டமைப்பை திட்டமிடுமாறு ஜனாதிபதி ஆலோசனை
நுகர்வுக்கு தேவையான எரிபொருள் கையிருப்பு நாட்டில் உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் அதிகாரிகள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அறிவித்துள்ளனர்.
மக்களுக்கு இடையூறு இன்றி எரிபொருளை விநியோகிப்பதை உறுதி செய்வதற்கு இந்த கையிருப்பை தொடர்ச்சியாக பேணுவதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
அடுத்த வருடத்திற்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு வினைத்திறனான திட்டங்களை வகுக்குமாறும் அவர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
ஜனாதிபதிக்கும் அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன்போதே அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
இதேவேளை இந்தியாவின் உதவியில் கிடைக்கப் பெற்றிருக்கும் சூரிய சக்தி மின்கட்டமைப்பை பகிர்ந்தளிப்பதற்கான திட்டத்தை தயாரிக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஏனைய வெளிநாட்டு கடன் வசதியில் நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டங்களை விரைவுபடுத்துவதன் அவசியமும் பற்றியும் இந்த சந்திப்பின் போது சுட்டிக்காட்டப்பட்டது.
வெளிநாட்டு உதவியில் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்களை விரைவுபடுத்தும் நோக்கில், மூன்று மாதங்களுக்குள் அதற்கான அனுமதியை பெறுவதற்கு குழுவொன்றை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.