நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை வலுவான நிலையில்.
சுற்றுலா நியூசிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்றாகும்.
பொலோ ஒன் முறையின் கீழ் தனது இரண்டாவது இனிங்சிற்காக துடுப்பெடுத்தாடும் நியூசிலாந்து அணி, நேற்றைய ஆட்டநேர முடிவின் போது 5 விக்கெட் இழப்பிற்கு 199 ஓட்டங்களை பெற்றிருந்தது.
நேற்றையதினம் தனது முதலாவது இனிங்சை ஆரம்பித்த நியூசிலாந்து அணி 88 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
பிரபாத் ஜயசூரிய அபாரமாக பந்துவீசி ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றினார். முதல் இனிங்சில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 602 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில்,
ஆட்டத்தை இடைநிறுத்தி நியூசிலாந்து அணிக்கு வாய்ப்பை வழங்கியது. இலங்கை அணி சார்பில் கமிந்து மென்டிஸ் ஆட்டமிழக்காமல் 182 ஓட்டங்களையும், டினேஸ் சந்திமால் 116 ஓட்டங்களையும் குசல் மென்டிஸ் 106 ஓட்டங்களையும் பெற்றிருந்தமை சிறம்பம்சமாகும்.
இந்தப்போட்டியில் இனிங்சால் வெற்றி பெறும் வாய்ப்பு இலங்கை அணிக்கு பிரகாசமாக உள்ளது. போட்டி நிறைவடைய இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில் மேலும் 315 ஓட்டங்களை நியூசிலாந்து அணி பெறவேண்டும்.
போட்டியை இலகுவாக வெற்றி கொள்ள இலங்கை அணிக்கு மேலும் ஐந்து விக்கெட்டுகள் தேவை. இந்தப் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெறும் பட்சத்தில் இலங்கை அணி சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டெஸ்ட் போட்டி சம்பியன்ஷிப் பட்டியலில் மேலும் முன்னேறக்கூடிய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது இலங்கை அணி மூன்றாமிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.