இலங்கையுடன் இராஜதந்திர உறவுகளைப் பலப்படுத்த பல நாடுகள் தயார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சில நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸ{டனான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. ஜனாதிபதித் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க ஈட்டிய வெற்றிக்கு கனேடிய உயர்ஸ்தானிகர் வாழ்த்து தெரிவித்தார். ஊழல் மோசடியை ஒழித்தல் மற்றும் நாட்டில் பாதுகாப்பான சூழலை உறுதிப்படுத்துவதற்கு ஜனாதிபதி முன்னெடுத்திருக்கும் அர்ப்பணிப்புகளையும் அவர் பாராட்டினார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்களுக்கு கனேடிய அரசாங்கம் பூரண ஒத்துழைப்பு வழங்கும் என்றும் உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.
இதேவேளை, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீவன்ஸ்ஸையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இலங்கையுடனான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கு அரப்பணிப்புடன் செயற்படுவதாக அவர் குறிப்பிட்டார். முதலீட்டாளர்களின் நம்பிக்கை வலுப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி, இலங்கைக்கான கியூப தூதுவர் அன்ரெஸ் கொன்சாலேஸ் கொரிடோவையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இரு நாடுகளினதும் நட்புறவு மற்றும் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவது பற்றி இதன்போது ஆராயப்பட்டது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா-விற்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இலங்கையின் அபிவிருத்திக்கு முடியுமான சகல ஒத்துழைப்புக்களையும் வழங்குவதற்கு இந்தியா தயார் என்று உயர்ஸ்தானிகர் இதன்போது தெரிவித்தார். அயல்நாடு என்ற வகையில் இருநாடுகளுக்கும் இடையிலான நிலையான நட்புறவினைப் பேணிக்கொண்டு முன்னோக்கிச் செல்வதன் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மோசடிக்கு எதிரான பயன்மிக்க வேலைத்திட்டங்களுக்கு அரச கட்டமைப்பினை டிஜிற்றல் மயப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் சந்தோஷ் ஜா குறிப்பிட்டார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்காவின் கொள்கைத் திட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும் மோசடி எதிர்ப்பு வேலைத்திட்டத்தை அவர் வரவேற்றார். டிஜிற்றல் மயப்படுத்தும் செயற்றிட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க இந்தியா தயார் என்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கூறினார்.
இதேவேளை, இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசு-கொஷி ஹிதேகி, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்காவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். மோசடியற்ற அரச நிர்வாகத்திற்காக புதிய ஜனாதிபதிக்கு ஜப்பானின் பூரண ஒத்துழைப்பு கிடைக்கும் என்று அவர் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட கால உறவை மேலும் வலுப்படுத்த ஜப்பான் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் ஜப்பான் தூதுவர் கூறினார். நட்பு நாடு என்ற வகையில் நெருங்கிய தொடர்பைப் பேணுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர்; தெரிவித்தார்.
இலங்கையர்களுக்கு ஜப்பான் மொழி கற்பிக்கும் சந்தர்ப்பத்தை அதிகரிப்பதற்கும், ஜப்பானில் அதிகளவான தொழில்வாய்ப்புக்களை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுப்பதாகவும் ஹிதேகி இதன்போது ஜனாதிபதியிடம் உறுதியளித்தார்.
இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ ஷென் ஹொங் நேற்று காலை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்காவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இலங்கையின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு தமது நாடு தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் ஒத்துழைப்பு வேலைத்திட்டங்களின் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். இலங்கையின் அபிவிருத்திச் செயற்றிட்டங்களுக்காக சீன அபிவிருத்தி வங்கி மற்றும் சீன எக்ஸின் வங்கிகளின் பங்களிப்பை சீனத் தூதுவர் தெளிவுபடுத்தினார். இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயற்றிட்டங்களுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பெற்றிக் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்காவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இருநாடுகளுக்கும் இடையிலான பலமான இராஜதந்திர உறவுகளை உறுதிப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
மூன்றாம் சார்ள்ஸ் மன்னர் மற்றும் பிரித்தானிய பிரதமர் கிர் ஸ்டார்மர் (முநசை ளுவயசஅநச) ஆகியோரின் வாழ்த்துக்களையும் ஜனாதிபதிக்கு அவர் தெரிவித்தார்.
வெளிநாட்டு முதலீட்டின் ஊடாக இலங்கைக்கு பிரித்தானியா ஒத்துழைப்பு வழங்கும் என்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார். கல்வி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களுக்கு பிரித்தானிய ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.