வேட்புமனுக்களில் கையெழுத்திடும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
அடுத்த மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுடன் தொடர்புடைய பிரதான அரசியல் கட்சிகளின் வேட்புமனுக்களில் கையொப்பமிடும் பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, பொதுஜன பெரமுனவின் வேட்புமனுத் தயாரிப்பு இன்றுடன் நிறைவடைய உள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தி அனைத்து தேர்தல் மாவட்டங்களுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் விசேட வைத்தியர் நிஹால் அபேசிங்க தெரிவித்தார்.
கொழும்பு மாவட்டத்திற்கான வேட்புமனுக்கள் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் கைச்சாத்திடப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்புமனுக்களில் கையொப்பமிடும் நிகழ்வு கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்றது.
இதேவேளை, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியும் எதிர்வரும் பொதுத் தேர்தலில், இணைந்து போட்டியிட தீர்மானித்துள்ளது. இந்த கட்சிகள் திருகோணமலை மாவட்டத்தில் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடவுள்ளன.
தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் நான்கு வேட்பாளர்களும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பில் மூன்று வேட்பாளர்களும் போட்டியிடவுள்ளனர்.
இதேவேளை, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியும் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் தனித்து போட்டியிட உள்ளதாக, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஒன்பது மாவட்டங்களில் தனித்து போட்டியிடவுள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
அதன்படி, வடக்கு, கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்கள் உள்ளடங்களாக கொழும்பு மாவட்டத்திலும் எதிர்வரும் பொதுத் தேர்தலில், வீணைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளது. தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் நோக்குடன் இம்முறை கொழும்பு மாவட்டத்தில் தமது கட்சி போட்டியிட தீர்மானித்துள்ளதாக ஈபிடிபி கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டார்.