உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் விசாரணைகளில் தடை ஏற்படுத்த வேண்டாம்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றி அரசாங்கம் ஆரம்பித்துள்ள முறையான விசாரணைகளுக்கு தடை ஏற்படுத்த வேண்டாமென பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி அடிகளார் அரசியல் வாதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னைய அரசாங்கத்திடம் இவ்வாறான கோரிக்கைகள் விடுக்கப்பட்டாலும் இதுபற்றிய முறையான விசாரணையை தற்போதைய அரசாங்கமே ஆரம்பித்ததாக அவர் கூறினார்.
அரசியல் நலன்களைப் பெற்றுக் கொள்வதற்காக பல்வேறு தரப்புக்களும் ஊடகங்களின் ஊடாக மாறுபட்ட கருத்துக்களை முன்வைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவோர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை வகித்ததாக அருட்தந்தை சிறில் காமினி அடிகளார் சுட்டிக்காட்டினார்.
ஆட்சிப் பொறுப்பில் இருந்த போது இவர்கள் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள எந்தவிதத்திலும் ஆர்வம் காட்டவில்லை.
அரசியல்வாதிகளுக்கு இதுபற்றி விசாரணைகளை மேற்கொள்ள முடியாது எனவும் உரிய விசாரணைகளை மேற்கொள்வதற்காக விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரசியல்வாதிகள் இது தொடர்பாக ஊடகங்களின் மூலம் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு ஏமாற வேண்டாமெனறும் அருட்தந்தை சிறில் காமினி அடிகளால் மக்களிடம் கோரிக்கை விடுத்தார்.