முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட எதுவும் பறிக்கப்படவில்லை.
முன்னாள் ஜனாதிபதிகளின் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்;ட எதுவும் பறிக்கப்படவில்லை என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, மஹிந்த ராஜபக்ஷக்கு வழங்கப்பட்ட மூன்று வாகனங்களும் மீளப் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பில் திணைக்களம் இன்று விளக்கம் அளித்தது.
1986ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி வெளியிடப்பட்ட ஜனாதிபதியின் உரிமைச் சட்டத்தின் பிரகாரம், முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தற்போது பயன்படுத்தும் மேலதிக வாகனங்களை ஒப்படைக்குமாறு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
1986ஆம் ஆண்டின் 4ஆம் இலக்க ஜனாதிபதிகளின் உரிமைச் சட்டத்தின்படி, ஒவ்வொரு முன்னாள் ஜனாதிபதியும், முன்னாள் ஜனாதிபதியின் விதவை மனைவியருக்கும், அமைச்சரவையின் அமைச்சர்களுக்கு தற்போது வழங்கப்படும் அனைத்து உத்தியோகபூர்வ வாகனங்கள் உள்ளிட்ட ஏனைய வசதிகள் வழங்கப்பட வேண்டும்.
அத்துடன், 2010ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி, அப்போதைய ஜனாதிபதியின் செயலாளராக இருந்த லலித் வீரதுங்கவின் கையொப்பத்துடன் அமைச்சின் செயலாளர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதங்களின்படி, கௌரவ அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் பாவனைக்காகவும், பாதுகாப்பிற்காகவும் ஒதுக்கப்பட்ட அதிகபட்ச உத்தியோகபூர்வ வாகனங்களின் எண்ணிக்கை மூன்று ஆகும்.
முன்;னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இருந்த 16 வாகனங்களில் 8 வாகனங்கள் ஏற்கனவே கையளிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே பண்டார தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தற்போது 11 வாகனங்கள் உள்ளன.