உக்ரேன் இராணுவத்திற்கு நேட்டோ வழங்கிய பயிற்சியால் முன்னேற்றமில்லை
ரஷ்ய-உக்ரேன் மோதல் ஆரம்பித்து ஆயிரம் நாட்களைக் கடந்துள்ளது. இந்தக் காலப்பகுதியில் நேட்டோவில் பயிற்சி பெற்ற உக்ரேன் படையினரின் எண்ணிக்கை இலட்சத்தைக் கடந்துள்ளது.
எனினும் அதன் மூலம் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றங்களை உக்ரேன் படையினரால் பெற்றுக்கொள்ள முடியாது போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ரஷ்யாவின் கர்ஸ்க் வலயத்தில் நடவடிக்கை மேற்கொள்வதற்காக இந்த பயிற்சி பெற்ற படையின் பெரும் எண்ணிக்கையானோர் பயன்படுத்தப்பட்டனர்.
இதன்போது உயிரிழந்த உக்ரேன் படை வீரர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டுகிறது. தற்சமயம் இந்த வலயத்தில் குறிப்பிடத்தக்களவு நிலப்பரப்பை மீட்பதற்கு ரஷ்யாவினால் முடிந்துள்ளது.
இந்த நிலையில் அந்தப் பகுதியில் அதிக பனியுடனான காலநிலை ஆரம்பமாகியுள்ள நிலையில் அங்கு தாக்குதலை விரிவுபடுத்துமாறு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் பணிப்புரை விடுத்துள்ளார்.
உக்ரேனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் நவீன யுத்தத் தாங்கிகள் மற்றும் வேறு கனரக ஆயுதங்களை விநியோகித்தாலும், உக்ரேனால் குறிப்பிடத்தக்களவு வெற்றியை பெற்றுக்கொள்ள முடியவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.