குடிசன மற்றும் தொகை மதிப்பீட்டிற்கான தகவல்களை வழங்காதவர்களுக்கு தண்டனை
இம்முறை குடிசன மற்றும் தொகை மதிப்பீட்டிற்கான தகவல் சேகரிப்பில் தகவல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதாக குடிசன மதிப்பீட்டு மற்றும் தொகை மதிப்பீட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நடைமுறையில் தகவல்களைத் திரட்டுவதற்காக இரண்டு வலைப்பின்னல்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதென திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் K. L. C. S. வீரசூரிய தெரிவித்துள்ளார்.
அவர் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தகவல் அறிவித்தார். மக்கள் வழங்கும் தகவல்களின் இரகசியத் தன்மையைப் பாதுகாக்க சகல பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இத்தகைய தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இலங்கையில் சனத்தொகை மதிப்பீடு செய்யப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
கணக்கெடுப்ப நடவடிக்கையின் போது தகவல்கள் வழங்காதவர்களுக்கு எதிராக தண்டனை வழங்கப்படும் எனவும் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
குடிசன மதிப்பீட்டிற்காக வீடுகளுக்கு வருகை தரும் அதிகாரிகளுக்கு பிழையான தகவல்களை வழங்க வேண்டாம் என புள்ளிவிபரவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
குடிசன மதிப்பீட்டின் மூலம் பல நன்மைகள் உள்ளன. குறித்த தரவுகளை அடிப்படையாகக் கொண்டு பல்வேறுபட்ட அபிவிருத்திச் செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டி.டி.ஜி.ஏ.செனவிரத்ன தெரிவித்தார்.