தமிழரசில் இருந்து என்னையாரும் வெளியேற்ற முடியாது – வட்டுக்கோட்டையில் சிறீதரன் சூளுரை
“அரசியல் ரீதியான அழுத்தங்களும், நெருக்கடிகளும் நிறைந்திருக்கும் சமகாலத்தில், அவை அனைத்தையும் எதிர்கொண்டவாறு எனது அரசியல் பயணத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இருந்தவாறு தொடர்வதைப் போலவே, இனிவரும் காலங்களிலும் எனது பயணம் அமையும். கட்சியை விட்டு நான் ஒருபோதும் வெளியேறமாட்டேன். என் மீதான காழ்ப்புணர்ச்சியிலும், தமது தனிப்பட்ட இயலாமைகளின் அடிப்படையிலும் என்னை யாரும் எமது கட்சியிலிருந்து வெளியேற்றவும் முடியாது.”
– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளராகப் போட்டியிடும் சிவஞானம் சிறீதரனுக்கு ஆதரவளிக்கும் வகையில் யாழ். வட்டுக்கோட்டைத் தொகுதியில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சிறீதரன் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடும்போது, கட்சி ரீதியாகவும், தனிநபராகவும் என்னை ஆத்மார்த்தமாக நேசிக்கும் மக்களின் நியாயபூர்வமான கேள்விகள், உட்கட்சி முரண்நிலைகள் குறித்தே அமைந்திருக்கின்றன.
கட்சிக்கு எதிராகவும் தெரிவு செய்யப்பட்ட தலைவராக நான் செயற்பட முடியாதவாறும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டும் பலர், கட்சியைவிட்டு நான் வெளியேறியிருக்கலாம் என்ற கருத்துக்களை முன்வைக்கின்றார்கள். அதேவேளை, என்னைக் கட்சியைவிட்டு வெளியேற்றும் கைங்கரியங்கள் முன்னெடுக்கப்படலாம் என்றும் எதிர்வுகூறுகின்றார்கள்.
என்னையும், எனது தலைமைத்துவத்தையும் நேசிக்கின்ற – விசுவாசிக்கின்ற எனது மக்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான். எந்தச் சூழ்நிலையிலும் நான் தமிழரசுக் கட்சியை விட்டு வெளியேறப்போவதில்லை. என் மீதான காழ்ப்புணர்ச்சியிலும், தமது தனிப்பட்ட இயலாமைகளின் அடிப்படையிலும் என்னை யாரும் எமது கட்சியிலிருந்து வெளியேற்றவும் முடியாது.
தடைகள் அனைத்தையும் தாண்டி, எமது மக்கள் விரும்புகின்ற, அவர்களது மனதறிந்த மக்கள் பிரதிநிதியாக எனது அரசியல் பயணம் தமிழரசுக் கட்சியிலேயே தொடரும் என்பதை, தமிழீழப் பிரகடனம் நிறைவேற்றப்பட்ட வரலாற்று மண்ணான வட்டுக்கோட்டையில் வைத்து உறுதியோடு உரைக்கின்றேன்.” – என்றார்.