அரசின் கொள்கை பிரகடனம் – ஜனாதிபதியால் முன்வைப்பு ; என்ன கூறினார்?
பத்தாவது பாராளுமன்றின் முதலாவது அமர்வில் அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை சபையில் முன்வைத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உரையாற்றுகிறார்.
தம்மீதும் அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கை வைத்துள்ள அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்ற வகையில் தனியொரு கட்சி நாட்டை ஆள வேண்டும் என்று ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
எனவே, அனைத்து பிரஜைகளின் தேவைகளையும் நிறைவேற்றுவதற்கு தாம் கடமைப்பட்டிருப்பதாகவும், அதற்கு பொறுப்புக் கூறுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மக்களுக்கான பொறுப்பு தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், இந்த தருணத்தில் இருந்து ஜனாதிபதி என்ற வகையில் மக்களின் பொறுப்பை முழுமையாக ஏற்றுக்கொள்வேன் எனவும், நாங்கள் ஒரே நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளோம் என்பதை தேர்தல் பிரச்சாரத்தின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இனவாத அரசியலுக்கு மீண்டும் எமது நாட்டில் இடமில்லை.
எந்தவொரு மதவாதத்திற்கும் இடமில்லை என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
“ஆனால் எமது நாட்டில் மீண்டும் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக இனவாத, மதவாத, கோசங்களை கட்டியெழுப்ப எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என உறுதியளிக்கிறேன்”
அனைவரும் மக்கள் பிரதிநிதிகள் என்றால், நாடாளுமன்றத்தில் கூறப்படும் அனைத்தையும் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
வலுவான அரச சேவையின்றி நாடு ஒருபோதும் முன்னோக்கி செல்ல முடியாது எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
“வினைத்திறன் மிக்க அரச சேவை, மக்களின் நலனுக்காகச் செயற்படும் பொதுச் சேவை, இந்த நாட்டில் மீண்டும் நிலைநாட்டப்பட வேண்டும் என நாங்கள் நம்புகின்றோம். அதற்காக அரச ஊழியர்களிடமிருந்தே எமக்கு பலமான ஆணை வழங்கப்பட்டுள்ளதாக நான் கருதுகின்றேன். அதில் கவனம் செலுத்தியுள்ளோம்”
ஒவ்வொரு பிரஜையும் அவரவர் மதம், கலாசாரம் மற்றும் மொழியின் அடிப்படையில் தனிமைப்படுத்தப்படக் கூடாது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
“அரசியல் மாற்றங்கள் இருக்கலாம். சுதந்திரம் என்பது அனைவருக்கும் பொதுவானது. எனவே, அனைவருக்கும் அச்சம் மற்றும் சந்தேகம் இல்லாத சுதந்திர ஜனநாயக அரசை உருவாக்குவது நமது பொறுப்பாகும். அதை நாங்கள் உருவாக்குவோம் என்பதை உறுதியளிக்கிறோம்.”
“சட்டம் அமுல்படுத்தப்படுவதை மக்கள் உணர வேண்டும். சட்டத்தின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை உடைத்தெறிவதே சமீப காலமாக நாட்டில் நடந்துள்ளது. சட்டம், ஒழுங்கு மீது பொதுமக்களின் நம்பிக்கை தகர்ந்து விட்டது. இதற்குப் பிறகு யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. அனைவரும் சட்டத்தை கடைபிடிக்க வேண்டும். சட்டத்தின் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும்.”
கடந்த காலங்களில் சர்ச்சைக்குரிய குற்றச் செயல்கள் தொடர்பில் மீள விசாரணை செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் எனவும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
“நான் உங்களுக்கு உத்தரவாதம் தருகிறேன். சர்ச்சைக்கு வழிவகுத்த குற்றங்கள், அதற்கு காரணமானவர்கள் அம்பலப்படுத்தப்பட்டு, அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம். சட்டத்தையும் நீதியையும் அனுமதிக்கும் ஒரு அரசு நமக்குத் தேவை”
சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் ஒப்பந்தம் எதிர்வரும் 23ஆம் திகதி கைச்சாத்திடப்பட முடியும் எனவும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னோக்கி செல்லும் பயணத்தில் இது மிகவும் முக்கியமான படியாகும் என்றும் ஜனாதிபதி கூறினார்.
“பொருளாதாரம் மிகவும் நுணுக்கமாக வீழ்ச்சியடைய அனுமதிக்காமல் எல்லா பக்கங்களிலும் இருந்து சிந்திக்க வேண்டிய ஒரு காலகட்டத்திற்கு நாம் வந்துள்ளோம். இந்த பொருளாதாரம் தவறு செய்ய எங்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை.எனவே ஒவ்வொரு நுட்பமான இடத்தையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்”
புதிய பொருளாதார மூலோபாயத்தில் பிரவேசிக்கப்பட வேண்டும் என்றும் அது மூன்று பகுதிகளைக் கொண்டது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
“முதலாவதாக, பொருட்கள் மற்றும் சேவைகளின் உற்பத்தியில் விரைவான வளர்ச்சி மற்றும் விரிவாக்கம் அவசியம்.அப்படியானால் அந்த பொருளாதாரத்தில் மக்களை ஈடுபடுத்த வேண்டும் என்பதே அந்த பொருளாதாரத்தின் அடுத்த பண்பு.மக்கள் ஒதுக்கப்பட்ட பொருளாதாரத்தால் எங்களுக்கு எந்தப் பலனும் இல்லை. பொருளாதாரத்தின் ஒவ்வொரு செயல்முறையிலும் மக்கள் தங்கள் திறனைப் பொறுத்து பொருளாதாரத்தில் பங்கேற்பாளர்களாக இருக்க வேண்டும். மூன்றாவது குணாதிசயம் என்னவென்றால், நாம் எவ்வளவுதான் தேசியச் செல்வத்தை உருவாக்கினாலும், அந்தச் செல்வம் ஒரு சிலரின் கைகளில் குவிந்தால், அது அரசை நிலைப்படுத்தாது.பொருளாதார பலன்கள் நியாயமான முறையில் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் கொள்கை.
எரிசக்தி சந்தை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
இது மிகவும் உணர்ச்சிகரமான இடம் என்றும், நிதிச் சந்தையும் அத்தகைய முக்கியமான இடம் என்றும் ஜனாதிபதி கூறினார்.
இதன்படி, அரச பங்காக அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும், சிதறிய சந்தைக்குப் பதிலாக சந்தை ஒழுங்குபடுத்தப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
கூட்டுறவு வலையமைப்பை மீண்டும் பலப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
4 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை வரவழைத்து 8 மில்லியன் டொலர் பொருளாதாரத்தை உருவாக்குவதே தற்போதைய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
5 வருடங்களுக்குள் தகவல் தொழில்நுட்பத் துறையுடன் தொடர்புடைய நிபுணர்களின் எண்ணிக்கையை 2 இலட்சமாக உயர்த்த எதிர்பார்க்கப்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
தகவல் தொழில்நுட்பத் துறையின் ஏற்றுமதி வருமானம் 5 பில்லியன் டொலர்களாக அதிகரிக்கப்பட உள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான மூன்றாவது மீளாய்வுக்கான பணியாளர் மட்ட ஒப்பந்தம் எதிர்வரும் 23ஆம் திகதி கைச்சாத்திடப்பட உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.