Home » மலையக சமூகத்தின் நில உரிமைகளை மறுக்க அரசு முயற்சி!

மலையக சமூகத்தின் நில உரிமைகளை மறுக்க அரசு முயற்சி!

Source

“மலைநாட்டு தரை- நில-பாதுகாப்பு கொள்கை” என்ற போர்வையில், “மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகாரசபை (Central Highlands Protection Authority)” என்ற சபையை நிறுவி, அனுர அரசு, இந்திய வம்சாவளித் தமிழர் (IOT) / மலையக சமூகத்தின் நில உரிமைகளை மறுக்க முயற்சிப்பதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

இலங்கை அரசாங்கத்தின் தற்போதைய முயற்சி வெறும் வனப் பாதுகாப்பு திட்டத்தை தாண்டியது. இது நாட்டின் நீர்வள, பல்லுயிர் வள மற்றும் காலநிலை சார்ந்த அமைப்பாக மத்திய மலைநாட்டை பாதுகாக்கும் முழுமையான நிலப்பரப்பு (whole-of-landscape) கொள்கை என கூற படுகிறது.

இந்த கொள்கை மூலம், 2026 ஏப்ரல் மாதத்தில், மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகாரசபை (Central Highlands Protection Authority) ஒன்றை நிறுவ அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அறிவித்தது.

தற்போது பல்வேறு அரச நிறுவனங்களின் ஒருங்கிணைப்பற்ற நிர்வாகத்தின் கீழ் உள்ள மேல் நீர்ப்பிடிப்பு (upper watershed) பகுதிகளின் மீளுருவாக்கத்தையும், நிர்வாகத்தையும், ஒருங்கிணைப்பதே அதன் பிரதான பொறுப்பு என கூற படுகிறது.

இந்தக் கொள்கை பின்வரும் மூலோபாய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது:

நீர்ப்பிடிப்பு பகுதிகளின் பாதுகாப்பு
மகாவலி, களனி, வளவே உள்ளிட்ட முக்கிய நதிகளின் தலைநீர் ஆதாரங்களைப் பாதுகாத்தல்.

குடிநீர், பாசனம் மற்றும் நீர்மின் உற்பத்திக்கான நீர் கிடைப்பை மேம்படுத்தல்.

காலநிலை மாற்றத்திற்கான தாங்குதிறன். சீரழிந்த காடுகளையும் மலைச் சூழலியல் அமைப்புகளையும் மீளுருவாக்குதல். கார்பன் உறிஞ்சும் திறனை அதிகரித்தல். காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை குறைத்தல்.

இதை செய்யலாம். செய்ய வேண்டும். ஆனால், இது, மலையக மக்களின் காணி உரிமைக்கு இடையூறாக வர முடியாது.

மலைநாடு என்பதில் மத்திய மலை நாடு, கீழ் நாடு, என்ற இரு தரை அமைப்புகள் உள்ளன.

நுவரெலியா, கண்டி, பதுளை, தென்-மாத்தளை, ஆகிய மாவட்டங்கள் மத்திய மலைநாடு.

இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, கொழும்பு அவிசாவளை, காலி, மாத்தறை, மொனராகலை, குருநாகலை, வட-மாத்தளை மாவட்டங்கள் கீழ் மலைநாடு.

மத்திய மலைநாட்டு நீர் பிடிப்பு உட்பட்ட தரை அமைப்பு பாதுகாப்பு விதிகள், கீழ் மலைநாட்டு பெருந்தோட்ட பிரதேசங்களுக்கு பொருந்தி வராது.

ஆகவே, கீழ் மலைநாட்டு மாவட்ட பெருந்தோட்ட பிரதேசங்களில், வதி விட, வாழ் விட காணிகளை ஒதுக்கி, மலையக குடும்பங்களுக்கு வழங்க அனுர அரசு முன் வர வேண்டும்.

புவியியல் சாட்டுகளை சொல்லி மலையக காணி உரிமையை அனுர அரசு தட்டி கழிக்க முடியாது.
மேலும் இந்த மாவட்டங்களில், இப்போது தரிசு நிலங்களை தனியார் கம்பனிகளுக்கு வழங்க, அனுர அரசின் பெருந்தோட்ட அமைச்சு முயல்வது எங்கனம்?

அடுத்து, மத்திய மலை நாட்டில், மலை உச்சியில் அல்லாமல், கீழே சாலை ஓரங்களில் வீடமைப்பு காணிகளை, வழங்க முடியும். அவை இயற்கையாக பாதுகாப்பான பிரதேசங்கள் ஆகும்.

ஆகவே, நுவரெலியா, கண்டி, பதுளை, தென்-மாத்தளை, மாவட்டங்களில், மலையக குடும்பங்களுக்கு காணி தர அனுர அரசு முன் வர வேண்டும். சாக்கு போக்கு சொல்லி மலையக காணி உரிமையை தட்டி கழிக்க விட முடியாது என்று தெரிவித்துள்ளார்.

The post மலையக சமூகத்தின் நில உரிமைகளை மறுக்க அரசு முயற்சி! appeared first on LNW Tamil.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both