நேற்று (டிசம்பர் 12) இடம்பெற்ற சர்வதேச நாணய நிதிய சபைக் கூட்டத்தில் இலங்கையின் முன்னேற்றம் மற்றும் அது தொடர்பான உறுதிப்படுத்தல் வேலைத்திட்டத்தின் முதலாவது மீளாய்வை முடித்து 337 மில்லியன் டொலர்கள் இரண்டாவது தவணை கடனாக விடுவிக்கப்பட்டுள்ளது.
இந்த மதிப்பாய்வில், சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குநர்கள் குழு, கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பது, அரசாங்க வருவாயை அதிகரிப்பது, வெளிநாட்டு இருப்புக்களை அதிகரிப்பது, பணவீக்கத்தைக் குறைப்பது மற்றும் நிதி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துதல் ஆகியவற்றில் அதிகாரிகள் ஆற்றிய பணிகளைப் பாராட்டியுள்ளது.
மேலும், நிதியத்தின் முறைகளைப் பின்பற்றி அறிக்கையை (Governance diagnostic report) வெளியிட்ட முதல் ஆசிய நாடாக இலங்கை மாறியுள்ளதாகவும் குறிப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிதியின் அறிவிப்பின்படி, இருப்பு இலக்கு $3,806 மில்லியன் ஆகும். இந்தத் தொகையானது அசல் இலக்கான 4,431 மில்லியன் டொலர்களை விடக் குறைவு, இது இலகுவாக அடையக்கூடிய இலக்காகும்.
நவம்பர் இறுதியில் 3,584 மில்லியன் டொலர்கள் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு தொகையுடன் நிதியில் உள்ள 337 மில்லியன் டொலர்கள் சேர்க்கப்படும்போது, மேலே உள்ள இலக்கை எளிதில் தாண்டிவிடும்.