MUKAVARI 2023-12-27 21:42:00
இனியொரு விதி செய்வோம். இதுவரை நம்மைப் பகடைகளாய்ப் பயன்படுத்தி முள்ளிவாய்க்காலில் முழுநிர்வாணமாக்கி அரசியல் அநாதைகளாக்கி நிர்க்கதிநிலையில் முடிவுரை எழுதமுற்பட்ட பூகோள அரசியலை இனி நாம்தான் பயன்படுத்த வேண்டும். இனியும் பூகோள அரசியலில் பெரும்சக்திகள் எம்மைப் பயன்படுத்த அனுமதிக்க கூடாது. பெருஞ்சக்திகள் ஆளுக்காள் தங்கள் தேவை கருதி தமிழினத்தின் போராடும் குணமறிந்து எம்மினத்தைப் பகடைகளாக உருட்டுகின்றன என்பதே கடந்த காலங்களில் இருந்து கற்றபாடம். இனியும் பகடைக்காய்களாக இருப்பதை நிறுத்தி ஆட்டக்காரர்களாக களமிறங்க வேண்டும். அவர்களிடம் நாம் சொல்லாமல் சொல்ல வேண்டும் இத்துடன் நிறுத்து. இதோ கேள், இதுவே எங்கள் நிலைப்பாடு என்று!
உலகில் எம்மினத்தை எடுத்துக் கொள்ளுங்கள், ஆதிமொழி தமிழ் என்பதனை உலக அறிஞர்கள் தெட்டத்தெளிவாக எடுத்தியம்புவதனை நாம் காண்கின்றோம். மனித நாகரீகத்தின் முன்னோடிகள். வந்தாரை வாழவைக்கும் தமிழினம் அந்தப் பண்பாலேயே உயர்ந்து நிற்கின்ற தேசியஇனம் அதற்கொரு வரலாறு உண்டு. அதற்கொரு குணம் உண்டு. அதற்கு என்று பூர்வீக நிலங்கள் இன்றும் உண்டு. ஆனால் எங்கள் மேன்மைகள் யாவும் பறிக்கப்பட்ட அவலநிலையில் எமக்கான அடையாளங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதனைப் பற்றி நாம் நமக்குள் விவாதிக்க வேண்டும். நம்நிலையை ஆய்வுசெய்து அறிவுப்போர் புரிய ஆயத்தமாக வேண்டும்.
குறளி வித்தைகளும், கபட நாடகங்களும்
அரசதரப்பு எதிர்வரும் தேர்தலில் பெரும்பான்மையுடன் வெல்வதற்காக வகுக்கின்ற கூட்டுநாடகம்.
1. துவாரக வருகை நாடக அரங்கேற்றம் - சிங்கள சிந்தனைக் குழாமால் அரங்கேற்றப்பட்ட அரிதார நாடகம். தென்னிலங்கை மக்களை மீண்டும் விடுதலைப் புலிகளின் வருகையெனக் காட்டி சிங்கள வாக்குகளை வென்றெடுக்கும் அதே பழைய யுக்தி. ஆனால் புலம் பெயர் தமிழர்களின் துணிந்த தாக்குதல்களால் முகத்திரை கிழிக்கப்பட்டது.
2. இமாலயப் பிரகடனம் (இதுவரைபே அன்றி பிரகடனமாகாது) - வருகின்ற ஐ.நா கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக நேரிடக்கூடிய பாரிய போர்க்குற்றங்கள் விடயத்தில் இருந்து சிங்களத் தலைமைகளையும், சிங்கள இராணுவத்தையும் காத்துக் கொள்வதற்காக எடுக்கப்படும் தற்காப்புக் கவசமே இந்தப் பிரகடன நாடகம். மனித உரிமை மீறல், யுத்தக் குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை என்பவற்றிற்கு ஆதாரமாக இருப்பது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரமாகும். இன்றும் சர்வதேச நீதி பொறிமுறைக்கு கொண்டு செல்வதற்கு ஆதாரங்களை திரட்டும் நடவடிக்கையில் அதற்கான பலமாக சாட்சியங்களோடு தமிழர் தரப்பும் ஈடுபட்டு வருகிறார்கள். தை மாதம் 28 அதற்கான வெட்டுத் திகதியாகும். அப்படியான சர்வதேச நீதிப் பொறிமுறைக்கு ஆதாரங்களைத் திரட்டுவதும் அதன் மூலம் ஒரு பொது பரிகார நீதியும் அரசியல் தீர்வுக்கான முயற்சியும் மட்டும்தான் எம்மக்களுக்கு நலன் தரும் பிரதான அம்சமாகும். அதை விடுத்து கடந்தகாலங்களில் அதற்குத் தீர்வாக தாங்கள் உள்ளக விசாரணைகளை ஆரம்பிக்கிறோம் என்று அரசு உறுதி மொழி வழங்கியமை காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதியை இல்லாமல் ஆக்குகின்ற செயலாகவே அமைந்தது. காணமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரணச்சான்றிதழ் வழங்குகிறேன் என்ற கோத்தாவின் பேச்சும் ஐ.நா மற்றும் தமிழர்களது முயற்சிகளை நீர்த்துப்போக வைக்கும் நடவடிக்கையாக அமைந்ததுபோலவே இன்று நீலிக் கண்ணீர் வடிக்கும் அரசு ஒருபுறமும், இமாலயப் பிரகடனம் எனும் அண்டப்புழுகுடன் நல்லிணக்கம் சமாதானம் எனும் நாடகத்தைக்காட்டி சிக்கலில் இருந்து தப்புவதோடு மட்டுமல்லாது சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெறக்கூடிய நிதியைப் பெற்றுக் கொள்வதையும் உள்நோக்கமாக நாம் இனங்காணவேண்டும்.
3. அதேவேளை தமிழ்மக்களை அவர்களுக்கு ஒரு தீர்வு ஒன்று வரப்போவதாகக் காட்டி காலங்காலமாக வாக்குறுதிகளை மட்டும் கொடுத்து வாக்குகளைப் பெற்று பெருவெற்றி காண்பதற்கு எடுக்கப்பட்ட அதே பழைய யுக்தி.
ஆறாந்திருத்தச்சட்டமும் ஐக்கியமும்.
நாங்கள் இப்பொழுது ஒரு நிபந்தனையாக மனித உரிமைகளின் பிரதானமான கருத்துச் சுதந்திரத்தை மறுக்கும் ஆறாந்திருத்தச்சட்டத்தை எடுத்தால் பேச்சுவார்த்தைகள் மேல் எமக்கு நம்பிக்கை பிறக்கும் என்ற முன்நிபந்தனையைத் தெரிவித்தோம். ஆயினும் சிந்தித்துப் பார்த்ததில் குணாகவியழகனின் அரசியல் அறிவு இயக்கத்தின் கருத்துக்கள் எம் சிந்தனையை மறுபரிசீலமைக்க உதவியது.
ஆம் குண கவியழகனின் கூற்றுப் பிரகாரம் நாம் ஆறாந்திருத்தச்சட்டத்தை அகற்றக் கோரினால் மனித உரிமைகள் பற்றிப் பேசினால் அவர்கள் அதனை அரசியலாக்கி, தமிழீழக் கோரிக்கையை வலுவாக்க புலம்பெயர் தமிழர்கள் முயற்சிக்கின்றார்கள். நாம் ஒரு பொழுதும் அதற்கு இடம் கொடுக்கமாட்டோம் என்று சிங்கள மக்களிடம் காட்டி வாக்கு வேட்டைக்கு ஆயத்தமாவார்கள். இதற்கு மாறாக நாம் மாற்றி யோசிக்க வேண்டும்.
பயங்கரவாத தடைச்சட்டமும், பதின்மூன்றாம் திருத்தச்சட்டமும்.
பேச்சுவார்த்தை மூலம் ஒரு நிரந்தரத் தீர்வு காண முயலும் தாயக மக்கள் ஆறாந்திருத்தச்சட்டம் பற்றி பேசாது, மாறாக தங்கள் மீது இன்றும் தொடரும் பயங்கரவாதத் தடைச்சட்டம் பற்றி விசனமுறுகின்றார்கள். எனவே பயங்கரவாதத்தை ஒழித்துவிட்டோம் என உலகம் முழுவதும் தம்பட்டம் அடித்துவரும் சிறீலங்கா அரசானது, இன்றும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை தொடர் புதியவரைபுகள் மூலம் வலுப்படுத்துவதானது “தன்னெழுச்சியுறும் பொதுமக்களை சிங்கள மக்கள் உட்பட குறிப்பாக வடக்கு-கிழக்கு மக்களையும் நசுக்கவே என்பதனைப் புரிந்துகொண்டு அரசிடம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை விலக்கும்படி கோருவதன் மூலம் நல்லிணக்கத்திற்கான, உண்மையாகச் செயல்படுவதற்கான உத்தரவாதத்தை இந்த அரசாங்கம் வழங்கவேண்டும் என்ற வேண்டுகோளை அனைத்து தமிழ்க்;கட்சிகளும், தமிழ் சமூக அமைப்புக்களும் முன் வைக்கவேண்டும்.
அத்தோடு மட்டுமல்லாது இலங்கைத்தேசியத்தை அதன் ஐக்கியத்தைக் காக்க பிரிவினையைத் தடுக்க எனக் காரணங்காட்டி பாதுகாக்கவென (தமிழர்களை இரண்டாந்தரப் பிரசைகளாக்கி) ஆறாந்திருத்தச் சட்டத்தை எவ்வாறு இன்றுவரை நேர்மையாக நடைமுறைப்படுத்தும் அரசு உண்மையில ஐக்கியத்தையும் சமாதானத்தையும் பேண இதயசுத்தியோடு பதின்மூன்றாம் திருத்தச்சட்டத்தையும் நடைமுறைப்படுத்தல் வேண்டும். 13 ஆந்திருத்தச் சட்டமானது ஒருபொழுதும் தமிழர் தரப்புக்கான ஓர் அரசியல் தீர்வைத் தரப்போவதில்லை. ஆயினும், இலங்கை அரசு சர்வதேச தளத்தில் அதன் நேர்மையான அரசியலை வெளிப்படுத்தும் வகையிலும் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்பட்ட தமிழர் தாயகப் பரப்பை ஏற்றுக் கொண்ட 13 ஆந்திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தினால் நாங்கள் ஒரு அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைக்குத் தயாராவோம் என தமிழ் மக்கள் சமூகக்கட்டமைப்புக்களும், தமிழ்தேசிய அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு முன்வைக்கவேண்டும்.
இலங்கை இனப்பிரச்சனையில் இந்தியாவின் முக்கியத்துவம்...
ஆறாந்திருத்தச் சட்டத்தை நேர்மையாகக் பிரிவிiனையைத் தடுத்து இலங்கைத்தேசியத்தின் ஐக்கியத்தைக் காக்க இன்றுவரை நடைமுறைப்படுத்தும் சிறீலங்கா அரசு அதன் பின்னர் வந்த 13 ஆம் திருத்தச் சட்டத்தையும் அதே நேர்மையுடனும் இதயசுத்தியுடனும் நடைமுறைப்படுத்தலாம் அல்லவா? ஏன் அவர்கள் தயங்குகின்றார்கள்? ஏனெனில் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் என தமிழர்களின் தாயகபூமி என வடக்கும் கிழக்கும் குறிக்கப்படுவதை அவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியாத சூழ்நிலையில் சிங்கள தீவிரவாத மதபீடங்களும், சிங்கள மக்களும் எதிர்ப்பதனால்தான் அவர்களால் நடைமுறைப்படுத்த முடியவில்லை எனக் கபடநாடகங்களை ஆடுகின்றார்கள். அதனால் இந்தியாவின் புரிந்துணர்வு ஒப்பந்தமான “ராஜீவ் - ஜெயவர்த்தனே” கைச்சாத்திடட்ட ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பை இந்தியாவிற்கும் உணர்த்தி அவர்களது வகிபாகத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து நடக்க வைக்கவேண்டும்.
இந்தியாவிற்கு இலங்கையின் முக்கியத்துவம்:
இந்தியாவின் நெருங்கிய கடல்சார் அண்டை நாடான இலங்கை, இந்தியப் பெருங்கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் மூலோபாய ரீதியாக அமைந்துள்ளது.
அதன் ‘அக்கம்-முதல் கொள்கை’ மற்றும் ‘சாகர் (பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி) கோட்பாட்டின்படி, இந்தியா “இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தை அமைதியானதாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க” இலங்கைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. ஆனால் இவற்றை வென்றெடுக்க கையாளப்பட்ட தமிழர் பிரச்சனைகள் ஆறாத ரணங்களுடன் பரிகார நீதி தேடி அலைகிறது. அதேவேளை பாக்குநீரிணையின் இருகரையோரங்களிலும் வாழும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த தமிழினத்தைக் கணக்கில் எடுக்காமல், புறந்தள்ளிவிட்டு யாராலும் ஆதிக்கப்போட்டியில் வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ளவும் முடியாது. மனிதன் நீதி தவறினாலும், இயற்கையின் நீதி புதுத் தீர்ப்பொன்றை எழுதியே தீரும். ஒரு இனத்தினைச் சிதறடித்த அத்தனை நாடும் சிதறுண்டே போகும். தமிழர் நாம் தேடும் நீதி பழிவாங்கல் அல்ல இனப்படுகொலைக்கான பரிகார நீதியே! (31.03.2022 ஈழமுரசில் வெளியான ஆறு ஒப்பந்தங்களும், ஆறாத இரணங்களும் எனும் கட்டுரையின் நிறைவுப்பந்திகள்)
புதிய களம், புதிய உத்தி
எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு எனும் ஐயன் வள்ளுவரின் கூற்றுக்கமைய இங்கு வழங்கப்படும் பட்ட அறிவின் காரணமாக விளையும் சிந்தனைகளாக வந்துதித்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்பவற்றை நீங்களே உங்களுக்குள் பேசி இக்கட்டுரையின் உள்நோக்கைப் புரிந்து கொள்ளவேண்டும். மெய்ப்பொருள் அறிந்து பூகோள அரசியல் களத்தினிலே ஆட்டக்காரர்களாக தமிழர்தரப்பு களமிறங்கவேண்டும். “மந்தைக் கூட்டமல்ல தமிழர் நாங்கள் வேங்கைக்கூட்டம் என சிந்தையில் ஒன்றுபட்டால் எழுந்தால் தமிழர் நாம் வெற்றிச் சிகரத்தை தொடலாம்.” இதுவே மக்கள் புரட்சிக்கு வித்தாகும்!ஒன்றாகு தமிழா! வென்றாடுவோம்!
இதுபற்றிக் கலந்துரையாட விரும்புபவர்கள் கீழ்க்காணும் மின்னஞ்சல் மூலம் தொடர்புகொண்டால் வருகின்ற(29.12.2023) வெள்ளி இரவு 9.00 மணிக்கு நடைபெறும் இணையவழிக் கருத்தாடலுக்குரிய இணைப்பு அனுப்பி வைக்கப்படும். canadiantamilj@gmail.com