MUKAVARI 2024-01-07 10:24:13
உலகப் பொதுப் புத்தாண்டு வாழ்த்து உங்கள் அனைவருக்கும் உரித்தாகட்டும். 1.1.2024. ஆம் அங்கிலப் புத்தாண்டு என நம்மில் சிலர் கூறுகின்றோம். ஆனால் இன்று உலகிலுள்ள அனைத்து மானிடர்களும் ஏகமனதாக ஏற்று கொண்டாடும் பொதுப் புதுவருடம் ஆகையால் உலகப் பொதுப் புத்தாண்டு என்று விழித்தல் மிகையாகாது.
நம்முன்னோர் ஆன்மீக (மெஞ்ஞான) அறிவியல் ரீதியாக ஒரு வருடப் பிறப்பை வானியல் அடிப்படையிலும், இன்னும் ஒரு வருட பிறப்பை பருவ காலங்களின் அடிப்டையிலும் சூரியச் சுழற்சியை மையமாக வைத்தே வகுத்துள்ளனர்.
தைப்பொங்கலும், தமிழ் புத்தாண்டும்
உண்மையில் எனக்கு அறிவு தெரிந்தநாள் முதல் “தைப்பொங்கல்” என்று அறிந்தே வந்த பொங்கல் திருநாள் அது உழவர் திருநாள் என்றும் கூறப்பட்டதை செவி வழி நான் அறிவேன். பின்னாளில் இதே தைப்பொங்கல் தமிழர் திருநாள் என விழிக்கப்படலாயிற்று. பின்னர் இது தமிழ்ப் புத்தாண்டு என கொண்டாடப்படலாயிற்று… இதனை நாம் தமிழ்புத்தாண்டாய் ஏற்றுக்கொள்வதன் அவசியத்தையும் காலத்தின் கட்டாயம் என நாம் கருதுகின்றோம்.
ஆதி அந்தமற்ற ஒரு தர்மத்தை அல்லது மார்க்கத்தை கடைப்பிடித்து வந்த தமிழினம் இன்று இந்துக்கள் எனும் மத முத்திரைக்குள் முடக்கப்படுகின்றது. அதனுள்ளும் சைவம் வைஷ்ணவம் என்று பிரித்தாளப்படுகின்றது. அதையும் தாண்டி ஏகப்பட்ட ஆன்மீகக் குழுக்கள் போலித்தனமாக மக்களின் நம்பிக்கைகளை அடிப்படையாக வைத்து நல்லிணக்கத்தை தமிழர்களது ஐக்கியத்தை சிதைக்கின்றது. ஏன் தமிழுக்கு பெருந்தொண்டாற்றிய றோமன் கத்தோலிக்கப் தமிழ்க்குடிப்பெருமக்களின் ஐக்கியம் கண்டு அங்கும் பிரிவினைகளை நம்பிக்கையின் அடிப்படையில் ஊக்குவித்து உலக அரசியல் சதித்திட்டங்கள் நிதிப்பின்னணியில் பல பல புதிய புதிய சபைகளை உருவாக்கி இன்றும் மதமாற்றங்களைப் புரட்சிகரமாகத் தொடர்கின்றன. இது இன்று நேற்றல்ல அன்றே தொடங்கியது.
குடியேற்ற ஆட்சியாளர்களும் குடிகளைச் சிதைக்கச் செய்த சதியும்
குடியேற்ற ஆட்சியாளர்கள் வியாபாரம் செய்ய வருவது போல் வந்து நம் மன்னர்களுடனும் மக்களுடனும் வியாபார உறவுடன் ஆரம்பித்து எங்கள் சமூகத்தினுள் ஊடுருவி எமது பலம் பலவீனம் இரண்டும் அறிந்து எம்சமூகத்தில் திருமண உறவுகளையும் ஏற்படுத்தி தமது சூழ்ச்சி கோட்பாடுகளின் அடிப்படையில் எம்மைப் பிரித்தாளத் தொடங்கி எமது இராச்சியங்களைக் கைப்பற்றி குடியேற்ற ஆட்சியை நிலைநாட்டினர். யாதும் ஊரே யாவரும் கேளீர் என்றும் எம்மதமும் சம்மதமே எனும் உயர்கொள்கையில் வந்தாரை எல்லாம் அரவணைத்து வாழ வைத்தே வாழ்ந்த எங்கள் தமிழினம் தன்னினத்தை கருவறுக்க நடந்த சதிச்சூழ்ச்சி அறியாமல் வீழ்ச்சியடையத் தொடங்கியது. திட்டமிடப்பட்ட வகையில் மதங்களைப் பரப்பி தமிழர்களிடையே மத ரீதியான பிரிவினைதனை வெற்றிகரமாக உருவாக்கினர். இது தமிழினத்திற்கு மட்டும் நடந்ததல்ல. கிழக்கிந்திய கொம்பனி எனும் பெயரில் ஊடுருவி ஆட்சிகளைக் கைப்பற்றி ஒட்டு மொத்தத்தில் மூன்றாம் உலக நாடுகளைச் சிதைக்க உளவாளிகள் நடத்திய ஒரு சதி. இதற்கான ஆவணங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. துருக்கியில் உள்ள வக்ஃப் இக்லாஸ் பதிப்பகம் 2001 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆங்கிலத்தில் வெளியிட்டது. இதே ஆவணம் தமிழிலும் பிரிட்டிஸ் உளவாளியின் ஒப்புதல் வாக்கு மூலம் என அடையாளம் பதிப்பகத்தால் 2022 இல் நாஞ்சிலான் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளது.
எம்மதமும் சம்மதமே
எனவே தமிழர்களிற்கிடையே அவரவர் நம்பிக்கைகளுக்கேற்ப தமிழர்கள் எம்மதமும் சம்மதம் என்ற கொள்கைவழி பிற மார்க்கங்களைத் தழுவத்தொடங்கினர். இலங்கையை எடுத்துக் கொண்டால் புத்தரின் வருகையின் பின் சங்கமித்திரை வருகையினால் தமிழர்களும் பௌத்தத்ததை தழுவினர், அரபியர்களுடன் வியாபார உறவாடலாலும் மற்றும் தமிழகத்தில் இருந்துவந்த முகமதுவின் போதனையை ஏற்றுக் கொண்ட தமிழர்களாலும் இசுலாத்தைத் தழுவிய இசுலாமியத் தமிழர்கள் பின்னாளிள் குடியேற்ற ஆட்சியாளர்களால் கிறிஸ்தவத் தமிழர்கள் எனப்பிரிக்கப்பட்ட எமது இனத்தின் ஐக்கியத்தை வலுப்படுத்த உழவர் திருநாளான தமிழர் திருநாளை “தமிழ் புத்தாண்டாகக் கொண்டாடுவதே சாலப் பொருத்தம் ஆகும். அவரவர் தங்கள் நம்பிக்கைகளுக்கு ஏற்ப சூரியனுக்கு நன்றி கூறும் எங்கள் மரபுபேணி தமிழ் புத்தாண்டைக் கொண்டாலாம் என்பதே அடியேனின் கருத்தாகும்.தைப்புத்தாண்டுதனை வெவ்வேறு மார்க்கங்களை பின்பற்றும் தமிழர்கள் தத்தமது நம்பிக்கையின் அடிப்படையில் வழிபாடுகளுக்கு ஏற்ப கொண்டாடலாம். இதுவே வழிபாட்டு சுதந்திரம்.