அசாதாரண காலநிலை: 22 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு
நாட்டின் ஏற்பட்டுள்ள மழையுடன் கூடிய காலநிலையினால், இதுவரை 22 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கடும் மழை காரணமாக, பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
காலி. மாத்தறை. களுத்துறை, கம்பஹா உள்ளிட்ட மாவட்டங்களின் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகள் பலவும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடும் மழை காரணமாக பல ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களப் பணிப்பாளர் எஸ்.பி.சி.சுகீஸ்வர தெரிவித்துள்ளார். அத்தனகலுஓயா, குருவல் ஓயா ஆகியவற்றின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் திவுலபிட்டிய, மீரிகம, அத்தனகல்ல, மஹர, கம்பஹா, மினுவாங்கொட. ஜாஎல, கட்டான மற்றும் வத்தளை பிரதேசங்களில் வெள்ள நிலைமை மேலும் அதிகரிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
களனி ஆற்றின் இருபுறமும் உள்ள தாழ்நிலப் பகுதிகளில் இலேசான வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கொலன்னாவ, பியகம, தொம்பே, சீதாவக்க போன்ற பிரதேசங்களிலும் சிறியளவிலான வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
களுகங்கையின் கிளை நதியான குடா கங்கை நிரம்பி வழிகின்றது. இதனால், புலத்சிங்கள. மதுராவளை, வலல்லாவிட்ட பகுதிகளில் வீதிகள் தொடர்ந்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதேவேளை, நாட்டின் மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழையை எதிர்பார்க்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் கடமையில் உள்ள நிபுணர் சஜித் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.
இதேவேளை, புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் ‘சிவப்பு’ எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 வரை அமுலில் இருக்கும். எனவே, மறு அறிவித்தல் வரும் வரை கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும். கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.
கொழும்பிலிருந்து காலி மற்றும் மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகளின் உயரம் 2.5 தொடக்கம் 3 மீற்றர் வரை உயரும் சாத்தியம் காணப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.