Home » அடுத்த 12 மணித்தியாலங்களுக்கு வானிலை

அடுத்த 12 மணித்தியாலங்களுக்கு வானிலை

Source

வங்காள விரிகுடா மற்றும் இலங்கையைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழம் குறைந்த கடற்பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பான சிவப்பு எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இன்று (27) காலை 8 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அடுத்த 12 மணித்தியாலங்களுக்கு அமுலில் இருக்கும்.

மேற்கு – மத்திய வங்காள விரிகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த ‘ஓர்னப்’ (Ornab) புயல் மேலும் வலுவடைந்து, மிகத் தீவிர புயலாக மாறியுள்ளது.

இன்று அதிகாலை 2.30 மணியளவில், வடக்கு அட்சரேகை 15.9 மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 85.4 ஆகிய இடங்களுக்கு அருகில், காங்கேசன்துறையிலிருந்து சுமார் 890 கிலோமீற்றர் வடகிழக்கே இந்தப் புயல் மையம் கொண்டிருந்தது.

இந்தப் புயல் இன்று பிற்பகல் 5.30 மணி வரை மேற்கு நோக்கிய வடமேற்குத் திசையில் நகரக்கூடும் எனவும், அதன் பின்னர் வடமேற்குத் திசையில் நகர்ந்து, நாளை (28) காலை 11.30 மணியளவில் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசக் கரையைக் கடந்து நிலப்பகுதியை அடையக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடலில் மணிக்கு 140 கிலோமீற்றர் வரை காற்று வீசக்கூடும்!

எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 80 முதல் 140 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.

அத்துடன், இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்பதுடன், கடல் அலைகள் 3 முதல் 4 மீற்றர் உயரம் வரை எழக்கூடும். இதனால் குறித்த கடற்பகுதிகள் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் மற்றும் கடற்படையினருக்கு முக்கிய அறிவுறுத்தல்

வடக்கு அட்சரேகை 10 முதல் 20 வரையிலும், கிழக்கு தீர்க்கரேகை 80 முதல் 95 வரையிலும் அமைந்துள்ள கடற்பகுதிகளில் மறு அறிவித்தல் வரை மீன்பிடி மற்றும் கடற்பயண நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

ஏற்கனவே குறித்த கடற்பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடற்பயண நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் பாதுகாப்பான கடற்பகுதிகளை நோக்கி தமது படகுகளைச் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

The post அடுத்த 12 மணித்தியாலங்களுக்கு வானிலை appeared first on LNW Tamil.

What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both