அடுத்த வருடங்களில் மக்கள் சிறந்த வாழ்க்கைத் தரத்தைப் பெறுவார்கள் – ஜனாதிபதி
2025 – 2026ஆம் ஆண்டளவில் மக்கள் சிறந்த வாழ்க்கைத் தரத்தைப் பெறுவார்கள் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலை விளையாட்டரங்கில் நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இயலும் ஸ்ரீலங்கா பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
அரச ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. தற்போது உதய செனவிரத்ன குழுவின் அறிக்கை பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, அரச ஊழியர்களுக்கு மாதாந்தம் 25 ஆயிரம் ரூபாவை வாழ்வாதார கொடுப்பனவாக வழங்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைப்பதற்கும், மேலதிக நிவாரணங்களை வழங்குவதற்கும் தான் எரிவாயு சிலிண்டரை ஜனாதிபதி தேர்தல் சின்னமாக பயன்படுத்துவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இதேவேளை, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துதல், மக்களுக்கு நிவாரணம் வழங்குதல், சுற்றுலாத்துறையின் முன்னேற்றம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்படுவது தொடர்பிலும் ஜனாதிபதி கருத்து வெளியிட்டார்.
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென விக்கிரமசிங்க இதன்போது சுட்டிக்காட்டினார்.
இந்த பொதுக்கூட்டம் நடைபெற்ற மேடையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோருக்கு கொழும்பு றோயல் கல்லூரியில் கற்பித்த ஆசிரியர் சிவலிங்கம் கலந்து கொண்டிருந்தமை விசேட அம்சமாகும்.
இங்கு உரையாற்றிய அமைச்சர் பந்துல குணவர்தன, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 70 சதவீதமான மக்கள் ஆணையை பெற்று மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு வருவதை எவராலும் தடுக்க முடியாது என்று தெரிவித்தார்.
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கான நிதியை எவ்வாறு பெற்றுக் கொள்வது என்பது குறித்த விடயத்தை உடனடியாக நாட்டுக்கு வெளிப்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு சவால் விடுப்பதாகவும் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட அரசியல் தலைவரான சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆற்றிவரும் பணிகளையும் அமைச்சர் பாராட்டினார்.
தமிழ் மக்கள் விடுதலைக் புலிகள் கட்சியின் தலைவரும், இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தனும், இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனும் இதன்போது உரையாற்றினார்கள்.